பள்ளி வளர்ச்சிக்கு ஊதியத்தை வழங்கி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல் 

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே பள்ளி வளர்ச்சிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கி, அசத்திய அரசு பள்ளி அறிவியல் ஆசிரியரை பெற்றோர், சமூக ஆர்வலர்கள பாராட்டி வருகின்றனர்.

பெண்ணாடம் அடுத்த தீவளூரில் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, பெண்ணாடத்தை சேர்ந்த ஜெயசங்கர், அறிவியல் ஆசிரியராக 26 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வருகிறார். வரும் மே மாதம் ஓய்வு பெற உள்ளார். இவர் இதுவரை, 24 நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார்.

ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள் 'விழுதுகளின் சங்கமம்' என்ற அமைப்பு சார்பில் வெள்ளி விழா மற்றும் பணிநிறைவு பாராட்டு விழாவை நேற்று பள்ளியில் நடத்தினர்.

தலைமை ஆசிரியர் முத்துக்குமரவேல் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் கலிவரதன், தமிழ்நாடு ஆதிதிராவிட நலச்சங்க நிறுவனர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர். பழனிவேல், சுப்ரமணியன், முனுசாமி, சிவகுமார், நல சங்க தலைவர் கணேசமூர்த்தி, ரோட்டரி சங்கம் வாசு, பள்ளி ஆசிரியர்கள் முத்துப்பாண்டியன், பாண்டியன், ரமேஷ்குமார், பாலசுந்தரம், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் வனசுந்தரி, பரமேஸ்வரன், தங்கராசு, பெண்ணாடம் தில்லைநாயகம், சக்கரபாணி கோபு, சீனிவாசன், விழுதுகளின் சங்கமம் அமைப்பு முன்னாள் மாணவர்கள் குமார், மனோஜ், திராவிடமணி, புகழ், செல்வம், வெங்கடேசன், இதயக்கனி, செல்வம், விக்னேஷ், பிரியா, சதீஷ்குமார், சுதா, சுகுணா உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், பள்ளியின் முன்னாள் மாணவர் சென்னை இசைக்கல்லூரி சரண்சிங் என்பவரின் மிருதங்கம் வாசிப்பில் தர்ஷினி என்பவர் ஆசிரியரை வாழ்த்தி பாடினார்.

ஆசிரியர் ஜெய்சங்கர், கொரோனா ஊரடங்கு காலங்களில் தீவளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.

அறிவியல் ஆசிரியராக பொறுப்பேற்றது முதல் அறிவியல் பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். வரும் மே மாதம் பணி நிறைவு பெற உள்ள நிலையில் தனது 1 மாத சம்பளத்தை (1 லட்சத்து 28 ஆயிரம்) பள்ளி வளர்ச்சிக்காக வழங்கியுள்ளார்.

முன்னாள் மாணவர் ஸ்டாலின் கூறுகையில், 'இப்பள்ளியின் முதல் பேட்ஜ் மாணவன் நான். ஆசிரியர் ஜெய்சங்கர், படிக்க வசதியில்லாத மாணவர்களின் வீடுகளுக்கே சென்று உதவித்தொகை, சீருடை, கல்வி உபகரணங்களை வாங்கி கொடுப்பார்.

இதுபோன்ற ஆசிரியர் எங்களுக்கு கிடைத்தது வரப்பிரசாதம் என, நெகிழ்ச்சியுடன் கூறினார். ஆசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.

Advertisement