பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு

பாட்னா: பீஹார் முதல்வர் நிதீஷ்குமாருடன் மீண்டும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயல்வதாக வெளியான தகவலை, எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி மறுத்துள்ளார்.
பீஹார் சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றுள்ள தே.ஜ., கூட்டணி தயாராகி வருகிறது. மறுபுறம், ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள ' இண்டி' கூட்டணியும் தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது.
இந்நிலையில் நிதீஷ்குமாரை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வர எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக தகவல் வெளியானது.
கடந்த காலங்களில் நிதீஷ்குமார் அடிக்கடி கூட்டணி மாறி உள்ளார். 2015ம் ஆண்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வரான நிதீஷ்குமார், பிறகு அதனை முறித்துக் கொண்டு பா.ஜ., ஆதரவுடன் முதல்வராக தொடர்ந்தார்.
2020 சட்டசபை தேர்தலில் பா.ஜ., உடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றார். ஆனால், இரண்டு ஆண்டுகளில் மீண்டும் ஆர்ஜேடி, காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியை தொடர்ந்தார்.
பிறகு அங்கு மீண்டும் முரண்பாடு ஏற்பட 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னர் மீண்டும் பா.ஜ., கூட்டணிக்கு திரும்பினார். பிறகு அவர், பழைய தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிஅளிப்பதாக தெரிவித்தார்.
நிதீஷ்குமாருக்கு கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன என முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் கூறினார். ஆனால், அதனை ஏற்க நிதீஷ் மறுத்தார்.
சமீபத்தில் சட்டசபையில், அவருக்கும், தேஜஸ்விக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நிதீஷ்குமார் பேசும்போது, லாலு சார்ந்த சமுதாய மக்களே அவரை முதல்வராக்க மறுத்தனர். ஆனால், நான் தான் லாலுவை முதல்வராக்கினேன், என பதிலளித்து இருந்தார்.
இந்நிலையில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மஹாராஷ்டிரா, ஹரியானா, டில்லி சட்டசபை தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வலுவாக உள்ள பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக நிதீஷ்குமாரை மீண்டும் தங்கள் கூட்டணிக்கு அழைத்து வர எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி கூறியதாவது: இதுபோன்ற யோசனைகளை உங்களுக்கு யார் சொன்னது? அவரை நாங்கள் ஏன் அழைக்க வேண்டும்? அதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை. முட்டாள்தனமாக பேசாதீர்கள். கூட்டணி தொடர்பாக அழைப்பு விடுக்க லாலு மற்றும் என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. யாரும் நிதீஷ்குமாரை அழைக்கவில்லை. இவ்வாறு தேஜஸ்வி கூறினார்.
மேலும்
-
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில்திருவிளக்கு, கன்னியா பூஜை
-
கொளுத்தும் கோடை வெயில்மண் பானை விற்பனை ஜோர்
-
ரத்ததான முகாம்
-
ராயனுாரில் அரசு வங்கிதொடங்க மக்கள் கோரிக்கை
-
பாளையம் - அரவக்குறிச்சி பஸ்கள்பஸ் ஸ்டாப் வரை செல்ல வலியுறுத்தல்
-
கரூரில் கொசு உற்பத்தி மீண்டும் அதிகரிப்புபொதுமக்கள் துாங்க முடியாமல் அவதி