சுகந்த், நிதேஷ் குமார் 'தங்கம்': ஸ்பெயின் 'பாரா' பாட்மின்டனில் அசத்தல்

விட்டோரியா: ஸ்பெயின் 'பாரா' பாட்மின்டன் ஒற்றையரில் இந்தியாவின் சுகந்த், நிதேஷ் குமார் தங்கம் வென்றனர்.

ஸ்பெயினில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச 'பாரா' பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 4' பிரிவு பைனலில் இந்தியாவின் சுகந்த் கடம், தருண் மோதினர். அபாரமாக ஆடிய சுகந்த் 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார்.

ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 3' பிரிவு பைனலில் இந்தியாவின் நிதேஷ் குமார், ஜப்பானின் டெய்சுகே புஜிஹரா மோதினர். இதில் நிதேஷ் 21-19, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.

பெண்கள் ஒற்றையர் 'எஸ்.எச். 6' பிரிவு பைனலில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ சுமதி சிவன் 21-9, 21-9 என போலந்தின் ஒலிவியாவை தோற்கடித்து தங்கம் வென்றார்.

ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல். 3-எஸ்.எல். 4' பிரிவு பைனலில் இந்தியாவின் நிதேஷ், தருண் ஜோடி 21-14, 23-25, 22-20 என சகநாட்டை சேர்ந்த ஜெகதீஷ், நவீன் சிவக்குமார் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

கலப்பு இரட்டையர் 'எஸ்.எச். 6' பிரிவு பைனலில் இந்தியாவின் நாகர் கிருஷ்ணா, நித்யா ஸ்ரீ சுமதி சிவன் ஜோடி 21-14, 21-11 என பிரிட்டனின் ஜாக் ஷெப்பர்ட், ரேச்சல் சோங் ஜோடியை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றியது.
கலப்பு இரட்டையர் 'எஸ்.எல். 3-எஸ்.யு. 5' பிரிவு பைனலில் இந்தியாவின் நிதேஷ் குமார், மணிஷா ஜோடி 21-9, 21-15 என சுவீடனின் நில்சன், நார்வேயின் சோபி ஜோடியை வென்றது.

Advertisement