வாலாஜாபாத் பஸ் ஸ்டாண்ட் உள்ளே வராத பேருந்துகளால் பயணியர் அவதி

வாலாஜாபாத், காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு அரசு நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்று வட்டார கிராமங்களுக்கு நாளொன்றுக்கு மூன்று நடைகள், சில பேருந்துகள் ஐந்து நடைகள் இயங்குகின்றன.
இப்பேருந்துகள், வாலாஜாபாத் ரவுண்டனா வழியாக காஞ்சிபுரம் செல்கின்றன. ரவுண்டானா துவங்கி, ஒரகடம் மார்க்கம் செல்லும் சாலையில் வாலாஜாபாத் பேருந்து நிலையம் உள்ளது.
இப்பேருந்து நிலையத்திற்குள் அப்பேருந்துகள் வராமல் நேராக காஞ்சிபுரம் இயக்கப்படுகிறது. இதனால், பேருந்து நிலையம் அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் போன்ற இடங்களுக்கு செல்வோர், ரவுண்டானா பகுதியில் இருந்து, பேருந்து ஸ்டாண்ட் வழியாக வெயிலில் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணியர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் ரவுண்டானா பேருந்து நிறுத்தம் வழியாக இயங்கும் அனைத்து வகை அரசு நகரப் பேருந்துகளும், பஸ் ஸ்டாண்ட் உள்ளே சென்று வர துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.