ஐ.சி.சி., கனவு அணியில் கோலி

துபாய்: சாம்பியன்ஸ் டிராபிக்கான ஐ.சி.சி., கனவு அணியில் இந்தியா சார்பில் கோலி, ஸ்ரேயாஸ் உள்ளிட்ட 6 பேர் இடம் பிடித்தனர்.
பாகிஸ்தான், துபாயில், சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து, 12 பேர் கொண்ட கனவு அணியை ஐ.சி.சி., வெளியிட்டது.

இந்த அணியில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக 6 பேர் இடம் பெற்றனர். கோலி, ஸ்ரேயாஸ் , ராகுல், ஷமி, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் தேர்வாகினர். விக்கெட் கீப்பருக்கான இடத்தை ராகுல் பிடித்தார். பைனலில், ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்த அணிக்கு கேப்டனாக நியூசிலாந்தின் சான்ட்னர் அறிவிக்கப்பட்டார்.


இந்த அணியில் நியூசிலாந்து சார்பில் 4, ஆப்கானிஸ்தான் சார்பில் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம் அணிகள் சார்பில் ஒரு வீரர்கள் தேர்வாகவில்லை.

கனவு அணி: ரச்சின் (நியூசி., 263 ரன், 3 விக்.,), இப்ராகிம் ஜத்ரன் (ஆப்கன், 216 ரன்), கோலி (இந்தியா, 218 ரன்), ஸ்ரேயாஸ் (இந்தியா, 243 ரன்), ராகுல் (விக்கெட் கீப்பர், இந்தியா, 140 ரன்), பிலிப்ஸ் (நியூசி., 177 ரன், 2 விக்., 5 'கேட்ச்'), அஸ்மதுல்லா ஓமர்சாய் (ஆப்கன், 126 ரன், 7 விக்.,), சான்ட்னர் (கேப்டன், நியூசி., 9 விக்.,), ஷமி (இந்தியா, 9 விக்.,), ஹென்றி (நியூசி., 10 விக்.,), வருண் (இந்தியா, 9 விக்.,), அக்சர் படேல் (12வது வீரர், இந்தியா, 5 விக்.,).

Advertisement