சிறப்பு ஆதார மானிய நிதி தாமதம்; மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி

சென்னை : மாற்றுத்திறனாளிகள் துவக்கியுள்ள, புத்தொழில் நிறுவனங்களுக்கு, நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, 'ஸ்டார்ட் அப் டி.என்.,' நிறுவனம் தாமதம் செய்வது, தொழில் முனைவோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்களுக்கு, நிதியுதவி, முதலீடு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை, தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப் டி.என்.,' என்ற நிறுவனம் வழங்குகிறது.
இந்நிறுவனம், புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ், துவக்க நிலையில் உள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்குகிறது.
பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு, 15 லட்சம் ரூபாய் வழங்குகிறது. தமிழக பட்டியலினத்தவர், பழங்குடியினர் திட்டத்தின் கீழ், அப்பிரிவுகளை சேர்ந்தோர் நடத்தும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, பங்கு முதலீடு அல்லது பிணையில்லா கடனாக நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, 'மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரால் நடத்தப்படும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, சிறப்பு ஆதார மானிய நிதி வழங்கும் திட்டம் துவக்கப்படும்' என, 2024 துவக்கத்தில் அரசு அறிவித்தது.
இதுவரை இந்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வரவில்லை. இது, மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதுபற்றி தொழில்முனைவோர் கூறுகையில், 'இந்த பிரிவுகளில், எத்தனை புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்ற விபரம் அரசிடம் உள்ளது; அவர்கள் கடும் சிரமத்திற்கு இடையில், தொழில்களை நடத்தி வருகின்றனர்.
'எனவே, இவ்விரு பிரிவினருக்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு, விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டு, விரைவாக நிதியுதவி வழங்க, ஸ்டார்ட் அப் டி.என்., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.