கிளாம்பாக்கத்தில் இருந்து 'கட் சர்வீஸ்' பஸ் அதிகரிப்பு
சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, கிண்டி, போரூர் உள்ளிட்ட இடங்களுக்கு, 'கட் சர்வீஸ்' பேருந்துகளின் சேவை அதிகரித்து இயக்கப்படுகிறது.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
வெளியூர் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுவதால், பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறோம். தற்போது, இங்கிருந்து பல்வேறு பிரதான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில், 80க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 816 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், குறுகிய துாரம் செல்லும் பயணியருக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பிராட்வேயில் இருந்து ஆலந்துார், தாம்பரம், கூடுவாஞ்சேரிக்கும் 'கட் சர்வீஸ்' பேருந்துகளின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வழித்தடத்திலும், மாநகர பேருந்துகளின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளன. வார விடுமுறை அல்லது திடீரென பயணியர் கூட்டம் வரும்போது, கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை அதிகரித்து இயக்கவும், கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.