கேரளாவில் எடையை குறைக்க 6 மாதமாக சாப்பிடாத இளம்பெண் பலி

கண்ணுார் : கேரளாவில், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, பல மாதங்களாக உணவு எதையும் சாப்பிடாமல், வெந்நீர் மட்டுமே குடித்து வந்த, 24 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள கூத்து பரம்பா என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநந்தா, 24, என்ற இளம்பெண், 'அனோரெக்ஸியா' என்ற உணவுக் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்டார். 'அனோரெக்ஸியா' என்ற உணவுக் கோளாறால் பாதிக்கப்படுவோர், எடை குறைவாக இருந்தாலும், எடை அதிகரிக்கும் என்ற தீவிர பயத்தால், உணவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பர்.


இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநந்தா, கடந்த ஆறு மாதங்களாக உணவு எதையும் சாப்பிடவில்லை. சமூக ஊடகமான, 'யு டியூப்'பை பார்த்து உணவு கட்டுப்பாட்டு முறையை பின்பற்றி வந்த அவர், வெறும் வெந்நீர் மட்டுமே குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.


உடல் மெலிந்த நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு, சில மாதங்களுக்கு முன், ஸ்ரீநந்தாவை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.


பரிசோதித்த டாக்டர்கள், நன்றாக சாப்பிடும்படியும், மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளும்படியும் ஸ்ரீநந்தாவுக்கு அறிவுறுத்தினர். எனினும், அவர் உணவு எதையும் சாப்பிடவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன், ஸ்ரீநந்தாவின் சர்க்கரை அளவு குறைந்து, சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, தலசேரி கூட்டுறவு மருத்துவமனையில் அவரை பெற்றோர் சேர்த்தனர்.


அப்போது, அவரது உடல் எடை, 24 கிலோவுக்கும் குறைவாகவே இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Advertisement