பிரதான குழாயில் கசிவு; வீணாகும் குடிநீர் சீரமைப்பு பணிகள் தொய்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் குடிநீர் தேவை, ஆழியாறு அணையை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்கள் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக, அம்பராம்பாளையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதான குழாய்கள் வாயிலாக, நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு சென்று, வினியோகம் செய்யப்படுகிறது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களுக்கான பிரதான குழாய், வஞ்சியாபுரம் பிரிவு, தென்குமாரபாளையம் வழியாக கோமங்கலம்புதுார், கெடிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வஞ்சியாபுரம் பிரிவு பகுதியில் ஏற்பட்ட குழாய் உடைப்பால், அதிகப்படியான குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. ஏற்கனவே, அதன் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, சீரமைப்பு பணிக்காக, குழி தோண்டப்பட்டது. ஆனால், அப்பணி ஒரு வாரம் கடந்தும் முடிக்கப்படாமல் உள்ளதால், அவ்வழியே செல்லும் பலரும் பாதிக்கின்றனர். இந்நிலையில், மீண்டும் கசிவு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது.

மக்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல நாட்களாக தண்ணீர் வீணாகிறது. தினமும், பல ஆயிரம் லிட்டர் குடிநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குழாய் உடைப்பு ஏற்பட்டால், அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை. வழிந்தோடும் குடிநீரால், வஞ்சியாபுரம் பிரிவு - நாட்டுக்கல்பாளையம் இடையிலான சாலையும் சேதமடைந்து வருகிறது. குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement