ரயில் பாதை அருகே குப்பைகள் எரிப்பு; அச்சத்தில் பொதுமக்கள்

பெ.நா.பாளையம், : துடியலூர் அருகே உருமாண்டம் பாளையத்தில் ரயில் பாதை அருகே பிளாஸ்டிக் குப்பைகள் போட்டு எரிப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உருமாண்டம்பாளையம் ரயில்வே கேட் அருகே ராகவேந்திரா நகர், பொன்விழா நகர், ராஜேந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. இதை ஒட்டி கோவை மேட்டுப்பாளையம் இடையே பாசஞ்சர் ரயில் செல்லும் ரயில் பாதை உள்ளது. தினமும் ஐந்து முறை இதில் பாசஞ்சர் ரயில் இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் ரயிலை பயன்படுத்துகின்றனர். ரயில் பாதை ஓரத்தில் ராஜேந்திரா நகர் அருகில் பிளாஸ்டிக் குப்பைகள், மக்கும் குப்பைகள் ஆகியவற்றை தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் கொண்டு வந்து கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ரயிலில் செல்வோர் மட்டுமல்லாமல், அப்பகுதியில் இருந்து பல்வேறு குடியிருப்புகளுக்கு செல்லும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எரிக்கும் குப்பையில் சிலிண்டர் போன்ற பொருள்களும் இருக்கின்றன. அவை வெப்பம் தாங்காமல் எப்போது வெடித்து சிதறும் என்ற அபாயமும் உள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும், இரவு நேரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை போட்டு எரிப்பதால் அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட்கள் மற்றும் குடியிருப்புகளில் வசிப்போர் மூச்சு திணறல்களுக்கு ஆளாகின்றனர். பிரச்னைக்கு ரயில்வே துறை நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement