திபெத்தியர்கள் அமைதி பேரணி

ஊட்டி : ஊட்டியில் திபெத்தியர்கள் பங்கேற்ற அமைதி பேரணி நடந்தது.

திபெத், சீன ஆதிக்கத்தின் கீழ் வந்த பின், பெரும்பாலான திபெத்தியர், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அகதிகளாக குடியேறினர். தமிழகத்தில், ஊட்டி, கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டங்களில், சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவாறு அங்கேயே தங்கி உள்ளனர். ஊட்டியில், 100 க்கும் மேற்பட்ட திபெத் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்கள், திபெத்தில் இறந்தவர்களின் நினைவாக ஆண்டு தோறும் மார்ச், 10ம் தேதி திபெத் எழுச்சி தினத்தை கடைபிடிக்கின்றனர். இந்நிலையில், திபெத்தியர்கள் பங்கேற்ற அமைதி பேரணி ஊட்டியில் நேற்று நடந்தது.

அதில், பங்கேற்ற திபெத்தியர்கள், 'சீனாவுக்கு எதிராக போராடி உயிரிழந்த திபெத்தியர்களின் நினைவாகவும், சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து திபெத்திற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும்,' என, வலியுறுத்தினர்.

தாவரவியல் பூங்கா அருகே துவங்கிய பேரணி, மதுவானா, சேரிங்கிராஸ் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் தாவரவியல் பூங்கா அருகே நிறைவடைந்தது.

Advertisement