'சரக்கு' வாங்க வேண்டியது... ரோட்டிலேயே குடிக்க வேண்டியது! அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பொதுமக்கள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர், சுற்றுப்பகுதி டாஸ்மாக் மதுக்கடை அருகே பொது இடங்களில், மது அருந்தும் 'குடி'மகன்களை தடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

பொது இடங்களில் மது அருந்துதல் சட்டப்படி குற்றமாகும். ஆனால், பொள்ளாச்சி நகர், மற்றும் சுற்றுப்பகுதிகளில் மிகவும் சர்வ சாதாரணமாக இதுபோன்ற அத்துமீறல்கள் அரங்கேறுகிறது.

குறிப்பாக, டாஸ்மாக் மதுக்கடை அமைந்திருக்கும் பகுதிகள், 'பார்' வசதி இல்லாத டாஸ்மாக் கடைகள் அருகிலும், பஸ் ஸ்டாண்ட் பகுதி, பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில், இத்தகைய விதிமீறல் தலைதுாக்கி வருகின்றன.

ஏ.டி.எஸ்.சி., தியேட்டர் ரோடு, ராஜாமில் ரோடு, கோட்டூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், காலை, 11:59 மணி வரைக்கும் இயல்பாக இருக்கும். மதியம் 12:00 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடை ஷட்டர் திறக்கப்பட்டதும் இப்பகுதிகள் பிசியாகி விடுகிறது.

பாதசாரிகள் போல சாலையின் இருபுறங்களிலும் நின்றுகொண்டிருக்கும் 'குடி'மகன்கள், டாஸ்மாக் கதவு திறக்கப்பட்டதும் அடித்து பிடித்து, அங்கு குழுமி விடுகின்றனர். அருகில் இருக்கும் பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட்டுகள், தின்பண்டங்களை வாங்கி, அங்கேயே அமர்ந்து, சாவகசமாக மது அருந்துகின்றனர்.

போதையில், ஒருவவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும், ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொள்வது என, அட்ராசிட்டியில் ஈடுபடுகின்றனர். அவ்வழியே செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர்.

மக்கள் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையோரத்திலேயே, டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. திறந்தவெளியில் மது அருந்துவோர், காலி பாட்டில்கள், குப்பைகளை அந்த இடத்திலேயே விட்டுச் செல்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க, பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய பகுதியில் டாஸ்மாக் கடை, எப்.எல்.,2 'பார்' மற்றும் தனியார் 'பார்' செயல்படுகிறது. இரவு நேரத்தில், பஸ் ஸ்டாண்டினுள் உலா வரும் 'குடி'மகன்களாலும் இடையூறு ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement