மருத்துவக்கல்லுாரியில் தண்ணீர் தட்டுப்பாடு வார்டுகளில் கழிப்பறை பராமரிப்பில் சிக்கல் தொடரும் நீர் திருட்டை தடுக்க வலியுறுத்தல்

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனையின் வார்டுகளில் உள்நோயாளிகள்பயன்படுத்தும் கழிப்பறைகள் பராமரிக்க தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

இம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சுமார் ஆயிரத்து 300 பேர் உள்நோயாளிகளாகவும், தினமும் 2 ஆயிரம் பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

மருத்துவகல்லுாரிக்கு 2 குடிநீர் திட்டங்கள் மூலம் 10 லட்சம் லிட்டர் நாள் தோறும் கிடைக்க வேண்டும்.

வைகை ஆறு அரப்படித்தேவன்பட்டி உறைகிணறு கூட்டு குடிநீர்திட்டம் மூலம் 5 லட்சம் லிட்டரும், வைகை அணையில் இருந்து நேரடியாக குழாய் மூலம் 5 லட்சம் லிட்டர் என தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.

ஆனால்பல இடங்களில் குழாய் சேதமடைந்தும், பம்பிங் ஸ்டேஷன் அருகே அதிகளவில் தண்ணீர் வெளியேறுவதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளனர்

ஆனாலும் வைகை அணையில் இருந்து வரும் 5 லட்சம் லிட்டர் நீரில் பகிர்மான குழாய் செல்லும்பாதையில் பல இடங்களில் திருட்டு தொடர்கிறது. இதை அதிகாரிகளும் கண்டும், காணாது போல் உள்ளனர்.

இதனால் முழு அளவில் தண்ணீர் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால் மருத்துவமனையில் காலையில் வரும் தண்ணீர் மாலையில் கிடைப்பது இல்லை.

இந்நிலை தண்ணீர் தட்டுப்பாட்டால் ஒருவாரமாக வார்டுகளில் கழிப்பறையை பயன்படுத்த முடியாத அளவிற்கு சுகாதாரக்கேடு நிலவுகிறது.

இதே நிலைதான் மருத்துவக்கல்லுாரி மாணவ, மாணவிகள், நர்சிங் மாணவிகள் சிரமங்களைசந்தித்து வருகின்றனர்.

மருத்துவக் கல்லுாரியின் தண்ணீர்,குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், பற்றாக்குறை தொடர்வதால் இதுவே நோய் பரவலுக்குகாரணமாகிவிடும் என நோயாளிகள் அச்சப்படுகின்றனர்.

இதனால் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நேரடியாக ஆய்வு செய்வது பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement