கட்டுமான தொழிலாளர்களுக்காக நடமாடும் மருத்துவ வாகனங்கள்

பெங்களூரு: கட்டுமான தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்திற்கு மருத்துவ சேவை செய்ய, தொழிலாளர் நல துறை சார்பில் நடமாடும் 100 மருத்துவ வாகனங்கள் சேவை துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக தொழிலாளர் நல துறைக்கு உட்பட்டது, கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கம். இந்த சங்கத்தின் சார்பில் தொழிலாளர்கள், அவரது குடும்பத்திற்கு மருத்துவ சேவை வழங்க, அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் 100 மருத்துவ வாகனங்கள் சேவை துவக்கி வைக்கப்படும் என்று கடந்த 2022 - 2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நடமாடும் 100 மருத்துவ வாகனங்கள் சேவை துவக்க விழா, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் நேற்று நடந்தது. தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட், வாகன சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

கட்டுமான தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் வசிக்கும் இடங்களுக்கு தேடி சென்று, மருத்துவ சேவை அளிக்கும் நோக்கில், நடமாடும் 100 மருத்துவ வாகனங்கள் சேவை துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. ஒரு வாகனத்தின் மதிப்பு 1.29 கோடி ரூபாய். இந்த வாகனத்தில் எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர் ஒருவர், நர்ஸ், மருந்தாளுநர், லேப் டெக்னீஷியன் இருப்பர்.

இந்த வாகனத்தில் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவி உள்ளது. மேலும் சில மருத்துவ உபகரணங்களும் உள்ளன; மருந்து, மாத்திரைகளும் கிடைக்கும்.

ஏதாவது அவசரம் என்றால், இந்த வாகனத்தை ஆம்புலன்சாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வாகனத்தில் கட்டட தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் இலவச சிகிச்சை பெறலாம். வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்படும்.

மாவட்டத்திற்கு மூன்று வாகனங்கள் வழங்க முடிவு செய்து உள்ளோம். வாகனங்களை கண்காணிக்க 'வார் ரூம்' அமைக்கப்படும். கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தில், இதுவரை 30.87 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement