தனியார் மருத்துவமனையில் பணி அரசு டாக்டர்களுக்கு அமைச்சர் தடை

பெங்களூரு: ''அரசு டாக்டர்கள், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, அரசு மருத்துவமனையில் பணியாற்றுவது கட்டாயம். எந்த காரணத்துக்காகவும், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிய கூடாது,'' என மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் பல்கிஷ் பானுவின் கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் கூறியதாவது:
தாமதம் ஏன்?
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், பணி நேரத்திலேயே தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று பணியாற்றுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தடுக்க மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. தினமும் காலை 9:00 மணிக்கு பணிக்கு வந்தால் மாலை 4:00 மணி வரை அரசு மருத்துவமனைகளில் தான் பணியாற்ற வேண்டும்.
இதற்கு முன் மதியம் 2:00 மணிக்கு பின், ஒரு மணி நேரம் வேறு இடத்தில் பணியாற்ற, அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் டாக்டர்கள் நிர்ணயித்த நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே, அரசு மருத்துவமனைகளில் இருந்து செல்கின்றனர்; தாமதமாக வருகின்றனர்.
இதை மனதில் கொண்டு, விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை அரசு மருத்துவமனைகளில் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமும் காலை பணிக்கு வந்தவுடன், பயோமெட்ரிக்கில் வருகையை பதிவு செய்ய வேண்டும். காலை 9:00 மதியம் 2:00 மணி, 3:00 மணி, 4:00 மணிக்கு வருகையை பதிவு செய்வது கட்டாயம். வருகை பதிவு அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
குறிக்கோள்
நோயாளிகளுக்கு சரியான நேரத்தில், சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது, அரசின் குறிக்கோளாகும். மாவட்ட மருத்துவமனைகளில், சுகாதார அதிகாரிகள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். நாங்கள் வகுத்துள்ள விதிமுறைகளின்படியே பணியாற்றுகின்றனர். சில மருத்துவமனைகளில் சிறு, சிறு பிரச்னைகள் உள்ளன. இவற்றை சரி செய்வோம்.
அரசு மருத்துவமனைகளில், நாளுக்கு நாள் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்து கொள்கிறோம்.
ஷிவமொக்காவின் அரசு மருத்துவமனையில் சில பிரச்னை இருப்பதாக, சட்டசபை உறுப்பினர்கள் என் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். நானே நேரடியாக மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்வேன்,
வளர்ந்து வரும் ஷிவமொக்காவில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்ட வேண்டும் என, உறுப்பினர் பல்கிஷ் பானு கோரிக்கை வைத்துள்ளார். இவ்விஷயம் குறித்து சுகாதாரத் துறையினர் முடிவு செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்
-
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு
-
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டு வெளியிட முடிவு