'கிரேட்டர் பெங்களூரு' திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கு மத்தியில், 'கிரேட்டர் பெங்களூரு' திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

நிர்வாக காரணங்களுக்காக, பெங்களூரு மாநகராட்சியை 7ஆக பிரித்து, வார்டுகள் எண்ணிக்கையை 400ஆக உயர்த்தும் திட்டத்தில், 'கிரேட்டர் பெங்களூரு' நிர்வாக சட்ட மசோதாவை, பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சரான, துணை முதல்வர் சிவகுமார் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

சட்டசபை, மேல்சபை கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைமையில் சட்டசபை பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மசோதாவை நன்கு ஆராய்ந்தனர்.

முன்னாள் மேயர், துணை மேயர்கள், கவுன்சிலர்களிடம் கருத்து கேட்டனர். கடந்த 5ம் தேதி சட்டசபையில் ஆய்வு அறிக்கையை, ரிஸ்வான் அர்ஷத் தாக்கல் செய்தார்.

மக்கள்தொகை



பெங்களூரு மாநகராட்சியை 3 முதல் 7 வரை பிரித்தும், பெங்களூரு ரூரல் பகுதிகளை உள்ளடக்கியதாகவும், கிரேட்டர் பெங்களூரு இருக்கலாம் என்பது உட்பட, பல அம்சங்கள் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

இதன் அடிப்படையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட, மசோதாவில் சில திருத்தங்களை செய்து, கிரேட்டர் பெங்களூரு திருத்த மசோதாவை, சட்டசபையில் துணை முதல்வர் சிவகுமார் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கெம்பே கவுடாவால் பெங்களூரு உருவாக்கப்பட்டது. உலகம் முழுதும் பெங்களூரை இன்று உற்றுநோக்குகிறது. நகர மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.

நிர்வாக கண்ணோட்டமாக பார்க்கும்போது, பெங்களூரு மாநகராட்சியை பிரிப்பது தவிர்க்க முடியாதது.

விதான் சவுதாவை கட்டிய கெங்கல் ஹனுமந்தய்யா, கர்நாடக முதல்வராகவும் இருந்தார். எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது, நான் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தேன். அப்போது பெங்களூரு சிறியதாக இருந்தது. இப்போது நகரம் வளர்ந்துவிட்டது.

இதனால் 'கிரேட்டர் பெங்களூரு' மசோதாவை கடந்த சட்டசபை கூட்டத்தில் கொண்டு வந்தோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கூட்டு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது மசோதாவில் திருத்தம் செய்து, தாக்கல் செய்துள்ளேன். பெங்களூரில் மக்கள்தொகை 1.44 கோடியாக உள்ளது. வாகனங்கள் எண்ணிக்கையும், மக்கள்தொகையை நெருங்கி வருகிறது.

பெங்களூரை மறுசீரமைப்பு செய்வது குறித்து பா.ஜ., அரசு, பல குழுக்கள் மூலம் ஆய்வு நடத்தியது. நாங்கள் 'பிராண்ட் பெங்களூரு' அமைக்க திட்டமிட்டு உள்ளோம். பெங்களூரு அனைவருக்கும் சொந்தமானது. கல்வி, வேலைவாய்ப்புக்காக இங்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கிரேட்டர் பெங்களூரு அமைந்தால், மாநகராட்சியை ஒன்று முதல் ஏழாக பிரிக்க வாய்ப்பு உள்ளது. நாங்கள் அனைவருடன் கலந்துரையாடுவோம். பின், முடிவு எடுப்போம். ஒவ்வொரு மாநகராட்சியிலும் அதிகபட்சம் 150 வார்டுகள் இருக்க வேண்டும். கவுன்சிலர்கள் பதவிக் காலம் 5 ஆண்டுகள். மேயர் பதவி காலம் இரண்டு ஆண்டு.

மேயர் பதவியேற்று ஆறு மாதங்களில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இல்லை. கிரேட்டர் பெங்களூரு தலைவராக முதல்வர் இருப்பார். பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் குழு உறுப்பினர்களாக இருப்பர். மக்கள் நலனுக்காக, இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் அங்கீரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மரண தண்டனை



எதிர்க்கட்சித் தலைவர் அசோக்: கெம்பேகவுடா வம்சாவளியில் வந்த சிவகுமார், பெங்களூரை உடைக்க முயற்சி செய்வது துரதிர்ஷ்டவசமானது. மாநகராட்சியை பிரிப்பதால் எந்த பயனும் இல்லை. கடந்த காலத்தில் பெங்களூரில் வசிக்கும் கன்னடர்கள் எண்ணிக்கை குறைந்தது.

இதை ஒரு சாக்காக பயன்படுத்தி சிலர், யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்றனர். இதை தடுக்க நகரின் வெளிப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களை இணைந்து, பெங்களூரு விஸ்தரிக்கப்பட்டது.

இப்போது ஏழு மாநகராட்சிகளை உருவாக்கினால், கன்னடம் எப்படி உயிர்வாழ முடியும்? எதிர்காலத்தில் கன்னடம் பேசாதவர்கள் மேயராக வருவதை தடுக்க முடியுமா? கிரேட்டர் பெங்களூரு, பெங்களூருக்கு கிடைத்த மரண தண்டனை.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னர் ஒப்புதல்



அப்போது அசோக்கிற்கு ஆதரவாக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்தனர். தொடர்ந்து பேசிய அசோக், “பெங்களூரில் 28 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளோம். இந்த மசோதா மீது பேச அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். விவாதம் இல்லாமல் நிறைவேற்ற கூடாது,” என்றார்.

அசோக்கை தொடர்ந்து பெங்களூரு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், மசோதா மீதான விவாதத்தில் பேசி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால் மசோதாவை நிறைவேற்ற ஆளுங்கட்சிக்கு போதிய பலம் இருந்ததால், மசோதாவை நிறைவேற்ற சிவகுமார் மும்முரம் காட்டினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

ஆனாலும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மேல்சபையிலும் காங்கிரசுக்கு போதிய பலம் இருப்பதால், அங்கும் மசோதா எளிதாக நிறைவேறிவிடும் என்று சொல்லப்படுகிறது.

இரு சபைகளிலும் ஒப்புதல் கிடைத்த பின், கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அவரும் ஒப்புதல் அளித்தால், கிரேட்டர் பெங்களூரு திட்டம் அமல்படுத்தப்படும்.

Advertisement