நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் தடுப்பு கற்கள்

குன்னுார் குன்னுார் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம், வாகன விபத்தை ஏற்படுத்தும் வகையில், தடுப்பு கற்கள் வைக்கப்பட்டதால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில், கடந்த, 2022ல், மேட்டுப்பாளையம் - குன்னுார் - ஊட்டி பாதையில் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் துவங்கியது. அதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, 35 கோடி ரூபாய்; குன்னுாரில் இருந்து ஊட்டி வரை, 27 கோடி ரூபாய் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. ஆனால், பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட சாலை ஓரங்களில் தோண்டப்பட்ட இடங்களில் கற்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இங்கு ஏற்கனவே இரு விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பல புகார்கள் அளித்தும், மீண்டும் பணிகளை இங்கு மேற்கொள்ளாமல், தேசிய நெடுஞ்சாலைதுறை மெத்தனத்தை கடைபிடித்து வருவது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வெலிங்டன் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றி விரிவாக்க பணி பாதியில் விடப்பட்ட இடத்தில், அவசியமில்லாமல் தடுப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

வளைவான இந்த பகுதியில், விபத்து அபாயம் அறிந்தும் இந்த கற்களால், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் விபத்து ஏற்படுத்தும் வகையில் வைத்த கற்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement