விளைநிலத்தில் மண் மாதிரி எப்படி எடுக்கணும்! வேளாண் மாணவியர் விழிப்புணர்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியில், மண் மாதிரி பரிசோதனை குறித்து, கோவை வேளாண் பல்கலை மாணவியர், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை வேளாண் பல்கலை நான்காமாண்டு மாணவியர், ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
அவர்கள், விவசாயிகளிடம் அனுபவங்களைக்கேட்டு அறிவதுடன், செயல்முறை விளக்கம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, மண் மாதிரி பரிசோதனை குறித்து விவசாயிகளிடம் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள், உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகே மண் மாதிரி எடுக்கக் கூடாது.
ஒரு ெஹக்டேருக்கு அரை கிலோ என இரு மாதிரிகள் எடுக்க வேண்டும். நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். உரமிட்டவுடன் மண் மாதிரி சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி இருக்க வேண்டும்.
மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல் ஆகியவற்றை மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். அதன்பின், 'V' போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும்.
அதன்பின், நிலத்தின் மேல்மட்ட பகுதியில் இருந்து, 15 செ.மீ., மற்றும் அதன் கீழ் மட்டத்தில் 15 செ.மீ., ஆழத்தில் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். இவ்வாறாக குறைந்த பட்சம் ஒரு ெஹக்டேரில், 5 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் கரண்டி வாயிலாக மண் மாதிரிகள் எடுத்து, பிளாஸ்டிக் வாளியில் சேகரிக்க வேண்டும். இரும்பு சட்டிகளை பயன்படுத்தக்கூடாது. அதன்பின், சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி, அதிலிருந்து, ஆய்வுக்கு மண் மாதிரியை எடுக்க வேண்டும்.
வாளியில் சேகரித்த மண் மாதிரியை பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும் இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.
மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் அதனை நிழலில் உலர்த்த வேண்டும். சேகரித்த மண் மாதிரியை சுத்தமான பாலித்தீன் பையில் போட்டு, அதன் மீது மாதிரியைப் பற்றிய விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.
உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக்கூடாது.
மண் பரிசோதனைக்கு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம். மேலும், 04253 288722 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்
-
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு
-
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டு வெளியிட முடிவு