மஹா சோளியம்மன், முத்துசாமி கோவில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் தரிசனம்

கரூர்: கரூர் அருகில் ஆத்துார் மஹா சோளியம்மன், முத்துசாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

கரூர் அருகே, ஆத்துார் வீரசோளிபாளையத்தில் மஹா சோளியம்மன், முத்துசாமி கோவில் கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்டு, ஆகம விதிமுறைப்படியும், சிற்ப சாஸ்திர முறைப்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 4ல் இரவு கிராம சாந்தியுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. 5ல் வாஸ்து பூஜை, 6ல் பூர்ணாகுதி நடந்த பின், தீபாராதனை காட்டப்பட்டது. மார்ச் 7 காலை, 8.00 மணிக்கு ஆச்சார்ய அஸ்திராபிஷேகம், தசவித ஸ்நானம் நடந்தது. தொடர்ந்து, கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம் புறப்பாடும் நடந்தது. அன்று மாலை முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது.

நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு ரஜதபந்தனம் (மருந்து சாற்றுதல்) நிகழ்வு நடந்தது. நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, 5:30 மணிக்கு மேல், 6:45 மணிக்குள் விநாயகர், மஹா சோளியம்மன், முத்துசாமி மற்றும் பரிவார மூலமூர்த்திகளுக்கு புனித நீரூற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிேஷக விழாவில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் தங்கவேல், அறக்கட்டளை தலைவர் முத்துசாமி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஆத்துார் காடை மற்றும் விளையன் குல குடிப்பாட்டுக்காரர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement