ரூ.7 லட்சம் மாத வருமானம் 20 பேருக்கு வேலை - அசத்துகிறார் இன்ஜினியர் பூக்கள் வளர்ப்பில் மாதம்

கண்ணுக்கு கவர்ச்சியாகவும், மனதுக்கு நிம்மதியையும் தருவது பூக்கள் தான். அனைத்து சுபகாரியங்களிலும் பூ இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

மனித வாழ்வில் இன்றியமையாத பூக்கள் வளர்ப்பில் இன்ஜினியர் ஒருவர் சாதித்து வருகிறார். அவர் பெயர் லோஹித் ரெட்டி, 31.

பெங்களூரின் கொம்மசந்திராவை சேர்ந்தவர். இன்ஜினியரிங் படிப்பு முடித்து விட்டு, பெரிய நிறுவனத்தில் வேலைக்கு செல்வார் என்று அவரது நண்பர்கள், உறவினர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவரோ, பூக்கள் வளர்ப்பில் ஆர்வம் காட்டினார். தற்போது மாதம் 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.

பள்ளி பருவம்



இதுகுறித்து லோஹித் ரெட்டி கூறியதாவது:

எனது குடும்பம் விவசாய பின்னணி கொண்டது. விவசாயத்திற்கு தேவைப்படும் கடின உழைப்பு, என்னிடம் அதிகமாக உள்ளது. பூக்கள் மீதான எனது ஆர்வம், பள்ளி பருவத்தில் இருந்தே துவங்கியது.

எனது உறவினரான கோபால் ரெட்டி, பூக்களை வளர்த்து விற்பனை செய்தார். அவரது தோட்டத்திற்கு சென்று, அவருக்கு நான் உதவி செய்து உள்ளேன்.

பூக்களை எப்படி பராமரிப்பது, எப்படி வளர்ப்பது என்று கோபால் ரெட்டியிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்டேன். கடந்த 2013ல், தனது தோட்டத்தை விட்டு விட்டு இங்கிலாந்துக்கு சென்று விட்டார். அப்போது எனக்கு 19 வயது. கோபால் ரெட்டி, விட்டு சென்ற தோட்டத்தில் பூ வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

மின்னணுவியல் துறையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பின், மற்றவர்களை போல தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று, இன்னொருவரிடம் வேலை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை.

கோபால் ரெட்டியிடம் பேசி, அவரது தோட்டத்தை வாங்கினேன். முதலில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். அதில் 8 லட்சம் ரூபாய்க்கு, 'பாலிஹவுஸ்' கட்டினேன். 4 லட்சம் ரூபாய்க்கு புனேயில் இருந்து 12,000 ஜெர்பரா ரக பூ செடிகள் வாங்கி வந்தேன். இந்த ரக பூக்களை சரியாக பராமரித்தால், பெரிய ஆதாயம் தரும். இதனை புரிந்து கொண்டு முறையாக பராமரித்தேன்.

18 மணி நேர இருள்



பூக்கள் வளர்ந்த பின், சந்தைகளில் மாதம் 40,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை விற்பனை ஆனது. கிரிஸான்தமம் என்ற பூ அதிகமாக தேவைப்படுவதை கவனித்தேன். இதனால் அந்த ரக பூக்களையும் எனது தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்தேன்.

ஆனால் அந்த பூவை வளர்ப்பதில் நிறைய சவால் இருந்தது. அந்த பூ வளர, தொடர்ந்து 17 முதல் 18 மணி நேரம் இருள் தேவைப்படுகிறது. கோடை நாட்களில் பூவை வளர்ப்பது சவாலாக இருந்தது. ஆனாலும் சவால்களை சமாளித்து பூக்களை வளர்க்க ஆரம்பித்தேன். ஜெர்பரா, கிரிஸான்தமம் மூலம் தற்போது நல்ல வருமானம் கிடைக்கிறது.

ஒரு கொத்து பூ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. நீர்ப்பாசனம், பண்ணை பராமரிப்பு செலவுக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் ஆகிறது. அதுபோக வருமானமாக எனக்கு 7 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. எனது தோட்டத்தில் 20 பேருக்கு வேலை கொடுத்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement