காந்தி பஜாரின் அடையாளம் வித்யாத்ரி பவன்: மசால் தோசை சாப்பிட முன்பதிவு அவசியம்

நம்ம ஊர்ல ஒரு பழக்கம் உண்டு, ஒரு கடையில ஒரு உணவு நல்லா இருந்துச்சுன்னா. அதுக்காக எவ்வளவு துாரம் கடந்தும் வருவோம், எவ்வளவு நேரமானாலும் நின்று வாங்கிட்டு போவோம். அப்படிப்பட்ட பழக்கத்தை ஒரு உணவு கடை உருவாக்கிடுச்சுன்னா, அது அந்த இடத்தோட அடையாளமாக மாறிடும். இது போன்று, பெங்களூரு காந்தி பஜாரின் அடையாளமாக 'வித்யாத்ரி பவன்' திகழ்கிறது.

பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற இடங்களில் ஒன்று வித்யாத்ரி பவன். இங்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டவர் என வராதவர்களே இல்லை என கூற முடியும். வி.ஐ.பி.,க்கள் அதிக அளவில் வந்தாலும், எப்போதும் மக்களின் கூட்டமே அதிகமாக இருக்கும்.

பொதுவாக, மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு, வி.ஐ.பி.,க்கள் வர மாட்டார்கள். இந்த ஹோட்டல், இதற்கு விதிவிலக்கு. காரணம் வேறொன்றும் இல்லை, சுவை தான்.

ரசிகர் பட்டாளம்



இந்த ஹோட்டல், 1943ல் துவங்கியது. 80 ஆண்டுகளை கடந்து விட்டது. சிறந்த உணவாக 'மசால் தோசை' உள்ளது. இதற்கான ரசிகர் பட்டாளம் ரொம்ப பெருசு. பரிமாற வரும் சப்ளையர், தோசையை எடுத்து வரும் ஸ்டைலை பார்த்தாலே நமக்கே சாப்பிடணும் என ஆசையாக இருக்கும். இந்த தோசை சுவையை பற்றி, நாள் முழுதும் பேசிக்கொண்டே இருக்கலாம் என சொல்கின்றனர் சாப்பிட்டவர்கள்.

ஒவ்வொரு நாளும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு டிக்கெட் வாங்க கூட்டம் நிற்பது போல, இங்கு கூட்டம் தான். இன்னும், சொல்லப்போனால், இங்கு வருவோர், தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

கூட்டத்தை ஹோட்டல் நிறுவனத்தினரால் கட்டுப்படுத்த முடியாததால், கடந்த சில தினங்களுக்கு முன், ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இதன்படி, ஹோட்டலுக்கு வருவோர், தங்கள் இருக்கைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். இதனால், கூட்டத்தை தவிர்க்க முடியும் என நிறுவனத்தினர் கருதினர். இது இணையத்தில் வைரலானது.

சராசரியாக, இந்த ஹோட்டலுக்கு தினமும் 1,500 பேர் வருகை தருகின்றனர். இருக்கை முன்பதிவு திட்டத்தால், ஹோட்டலுக்கு வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகமானது. இருப்பினும், முன்பதிவு முறையில், ஹோட்டலில் உள்ள 50 சதவீத இருக்கைகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். மீதமுள்ள இருக்கைகள், தினமும் வருவோர் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒரு தோசைக்காக 6 மணி நேரம்



எனது இருப்பிடம், எலக்ட்ரானிக் சிட்டி. அங்கிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து வந்து உள்ளேன். முதன் முறையாக சாப்பிட வந்து உள்ளேன். ஒரு மணி நேரமாக காத்திருக்கிறேன். சாப்பிட்டு விட்டு, வீடு செல்ல மீண்டும் இரண்டு மணி நேரம் ஆகும். இந்த மசால் தோசைக்காக ஆறு மணிநேரம் செலவிட உள்ளேன். ரொம்ப நாளாக திட்டமிட்டு இருந்தேன்.

நாகேஷ் வர்மா,

27, மென்பொருள் வடிவமைப்பாளர்,

எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூரு.




இருப்பிடம்



காந்தி பஜார் மெயின் ரோடு,பசவனகுடி, பெங்களூரு.

திறந்திருக்கும் நேரம்

காலை 7:00 மணி - மதியம் 1:00 மணி வரை

மதியம் 2:30 மணி - இரவு 8:00 மணி வரை

வெள்ளிக்கிழமை வார விடுமுறை

Advertisement