யார் அந்த சார்: போலீஸ் குற்றப்பத்திரிகையில் புதிய தகவல்கள்!

30

சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் தவிர மற்றொரு நபருக்கு தொடர்பில்லை' என போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஞானசேகரன். இந்த சம்பவத்தில் மாணவியை மிரட்டும்போது செல்போனில் ஒருவரிடம் சார் என்று கூறி பேசியதாக கூறப்பட்டதால் இந்த விவகாரம் பெரும் பேசு பொருளானது.

இந்த சம்பவத்துக்கும், சார் என்று அழைத்து ஞானசேகரன் போனில் பேசிய ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. யார் அந்த சார்? என்பது தெரிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இது தொடர்பாக விசாரிக்க நீதிமன்றம் சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டது.



இந்நிலையில், சிறப்பு குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் யார் அந்த சார்? என்பது குறித்து புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன் விபரம் பின்வருமாறு: பாதிக்கப்பட்ட 19 வயது மாணவியும் அவரது ஆண் நண்பரும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கோட்டூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 37 வயதான ஞானசேகரன், அடையாறு பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் பிரியாணி கடையை நடத்தி வந்தார். அவர் ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டிருந்தார்.


டிசம்பர் 23ம் தேதி, மாலை 7.10 மணிக்கு, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு தொப்பியை அணிந்து முகத்தை மறைத்து, ஞானசேகரன் நுழைந்தார். வளாகத்தில் தான் இருப்பதற்கான எந்த ஆதாரமோ அல்லது தடயமோ இல்லை என்பதை உறுதிப்படுத்த தனது மொபைல் போனை 'ஏரோபிளேன் மோடில்' போட்டுள்ளார்.


இரவு 7.45 மணியளவில், ஞானசேகரன் பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது நண்பரும் ஒரு கட்டடத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதைக் கண்டார். முதலில், அவர் நண்பரின் தலையில் அடித்து, மாணவியின் கல்லூரி அடையாள அட்டையைப் பறித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரது நண்பரையும், மொபைல்போனில் படம்பிடித்த வீடியோவை டீன், வார்டன் மற்றும் ஊழியர்களிடம் காண்பிப்பதாக மிரட்டினார்.


இருவரும், ஞானசேகரனிடம் தங்களை விடுவிக்குமாறு கெஞ்சினார்கள். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியை காப்பாற்றுவதாகக் கூறி, அவரை அதே இடத்தில் இருக்கச் சொல்லி, அவருடைய நண்பரை அழைத்துச் சென்றார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் திரும்பி வந்து,மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.


இதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பல்கலையில் தனக்கு அதிகாரம் உள்ளது என்பதை காண்பிப்பதற்காக, மாணவியை அச்சுறுத்துவதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் 'சார்' என அழைத்து ஒரு நபரிடம் பேசுவது போல் நடித்துள்ளார். குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் தனியாக செயல்பட்டு தவறு செய்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: குற்றவாளி பயன்படுத்திய மொபைல் போனின் அழைப்பு பதிவு குழு ஆய்வு செய்யப்பட்டது. அவர் யாரிடமோ பேசுவது போல் நடித்து, அந்தப் பெண்ணை மிரட்டுவதற்காக மொபைல்போனில் 'சார்' என்று அழைத்தார். உண்மையில், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement