'யார் அந்த சார்?' விடுகதை போலீஸ் அளித்த அதிர்ச்சி

சென்னை:'சார் என்ற நபர் யாரும் இல்லை; மாணவியை மிரட்ட ஞானசேகரன், சம்பவ இடத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்' என, சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை வழக்கில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசகேரன், 37, கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் அவர் மொபைல் போனில் பேசும்போதும், அந்த மாணவியை மிரட்டும்போதும், 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். இதனால், 'யார் அந்த சார்?' என கேள்வி எழுந்தது.

இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இக்குழுவினர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அதன் பின், இந்த வழக்கு, சென்னை பெரியமேடு அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், சம்பவ இடத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து, ஞானசேகரன் அளித்த வாக்குமூலம் இடம்பெற்று உள்ளது.

அதாவது, 'சம்பவத்தன்று இரவு 7:45 மணியளவில் குறைந்த வெளிச்சமே இருந்த இடத்தில், காதலருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை மிரட்டி உள்ளார். முகத்தை மறைக்க தொப்பி அணிந்துள்ளார்.

'காதலருடன் நெருக்கமாக மாணவியை இருக்க வைத்து, தன் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார்; அதை, விடுதி காப்பாளரிடம் காட்டி விடுவதாக மிரட்டி உள்ளார். மாணவியை மிரட்டவே, 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்' என, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement