தனி வழியில் செல்லும் முதல்முறை எம்.எல்.ஏ.,க்கள்

பெங்களூரு : பா.ஜ., தலைவர் விஜேயந்திரா உட்பட, முதல்முறையாக எம்.எல்.ஏ.,க்கள் ஆன 60 பேர், கட்சி பாகுபாடின்றி கூடி ஆலோசனை நடத்தியதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு, விதான் சவுதாவில், கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வந்துள்ள எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கான பவனில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், முதல்முறையாக சட்டசபைக்கு தேர்வாகி உள்ள, காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் 60 பேர் நேற்று முன்தினம் இரவு, பெங்களூரில் உள்ள ஹோட்டலில் ஒன்று கூடி ஆலோசித்தனர். பா.ஜ., மாநிலத் தலைவர் விஜேயந்திராவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இரவு உணவை அனைவருடன் சேர்ந்து அவரும் சாப்பிட்டார்.

முதல்வர் பதவிக்காக திரைமறைவில் சித்தராமையா, சிவகுமார் இடையே ஒரு பக்கம் போராட்டம் நடக்கிறது. 10ம் தேதி இரவு நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் மீது எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி வெளிப்படுத்தினர்.

இந்த சூழ்நிலையில் கட்சி பாகுபாடின்றி முதல்முறை எம்.எல்.ஏ.,க்கள் தனியே ஆலோசனை கூட்டம் நடத்தியது, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா நேற்று அளித்த பேட்டி:

சட்டசபைக்கு முதல்முறை 70 பேர் எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். கட்சி பாகுபாடின்றி பழகுகிறோம். நாங்கள் அனைவரும் இரவு உணவு சேர்ந்து, சாப்பிடுவதில் என்ன தவறு உள்ளது?

கூட்டத்தொடர் நடப்பதால் எங்கள் தொகுதிக்கு என்ன கேட்க வேண்டும் என்பது பற்றி விவாதித்தோம். இதை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. நாங்கள் என்ன செய்வது?

கடந்த ஆண்டு டிசம்பரில் பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்தபோது, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர் எங்களுக்கு விருந்து கொடுத்தார். இப்போது நான், எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா இணைந்து இரவு விருந்து கொடுத்தோம். நாங்கள் நடத்திய கூட்டத்தில் 60 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement