கெடுபிடி காட்டும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்: கடன் வாங்கி நிம்மதி இழக்கும் குடும்பத் தலைவிகள்

திருப்புல்லாணி, கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகளவு மைக்ரோ பைனான்ஸ்களின் செயல்பாடுகளால் அதிகளவில் குடும்பத் தலைவிகள், பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

20 பெண்கள் சேர்ந்து குழு ஆரம்பித்து ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம்வரை கடன் வாங்கி அவற்றை இரண்டு ஆண்டு தவணையில் வாரம் ஒருமுறை செலுத்தி வருகின்றனர்.

கடன் தொகையை காலை 6:00 முதல் மாலை 6:00 மணிக்குள் பெறுவதற்காக வேலைக்காக நியமிக்கப்பட்ட இளைஞர்கள் வருகின்றனர். தவணைத் தொகையை நாளை தருகிறேன் என்று கூறினால் அதெல்லாம் முடியாது உடனடியாக தர வேண்டும் என மிரட்டுகின்றனர்.

மேலும் வீடு மற்றும் இருப்பிடத்தை போட்டோ எடுத்து அதனை மைக்ரோ பைனான்ஸ் தலைமை அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் செய்ய வேண்டும் என கெடுபிடி காட்டுகின்றனர். இதேபோல் கந்து வட்டி கொடுப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

குடிசைத் தொழில் போல பைனான்ஸ் தொழிலை கிராமப்புறங்களில் பெருவாரியான இளைஞர்கள் கையில் எடுக்கின்றனர்.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

கிராமங்கள் தோறும் மைக்ரோ பைனான்ஸ்களின் முழு நேர பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள் ஊடுருவி உள்ளது. கல்லுாரி படிப்பை முடித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு கண்டிப்புடன் பேச வேண்டும், கெடுபிடி காட்ட வேண்டும்என பயிற்சி அளிக்கப்படுகிறது.

பெரும்பாலும் ஏழை கூலி, நடுத்தர தொழிலாளர்களின் குடும்பங்களை மையப்படுத்தியே இதுபோன்ற மைக்ரோ பைனான்ஸ்களின் செயல்பாடுகள் உள்ளது. கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி துாண்டி விடுகின்றனர்.

இதனால் ஏராளமான குடும்பத் தலைவிகள் நிம்மதியை இழந்து தவிக்கின்றனர். குழுவில் ஒருவர் பணம் செலுத்த தவறினால் கூட அனைவரும் முழு பொறுப்பு ஏற்கின்றனர். இதனால் அப்பகுதியில் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது.

சாலையோர வியாபாரிகள், கடைக்காரர்கள் உள்ளிட்டோரிடம் அதிகஅளவு கந்து வட்டி வாங்கும் கும்பல்களால் ஏராளமானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு தனியாக கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு உரிய வழிகாட்டுதலுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில் முன்னோடி வங்கிகள் மூலம் கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கு சுய தொழிலுக்கான கடன் ஈட்டுறுதியை வழங்க வேண்டும். மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம் பெயரளவில்தான் உள்ளது. இதனால் மைக்ரோ பைனான்ஸ்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் மைக்ரோ பைனான்ஸ்காரர்களின் கெடுபிடியை குறைக்கவும், உரிய வழிகாட்டுதலை வழங்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றனர்.

Advertisement