அரசு விழாவில் மனு அளிக்க வந்தவரைகுண்டுக்கட்டாக வெளியேற்றிய போலீஸ்


அரசு விழாவில் மனு அளிக்க வந்தவரைகுண்டுக்கட்டாக வெளியேற்றிய போலீஸ்


ஓமலுார்:ஓமலுார் அருகே மானத்தாள், ஓலைப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார், 40. இவரது தோட்டத்தில், சொசைட்டி மூலம் கடன் பெற்று, 'போர்வெல்' போட்டுள்ளார். அதற்கு 'டாப்செட்கோ' திட்டத்தில் மின் இணைப்பு கேட்டு பல முறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று, தாய் பாப்பா, 60, என்பவருடன், மானத்தாள் ஊராட்சியில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்த மக்கள் சந்திப்பு திட்ட முகாமுக்கு சசிக்குமார் வந்து, மனு வழங்க, விழா மேடை முன் காத்திருந்தார். அதிகாரிகள் மனு குறித்த கேட்ட போது, 'கலெக்டரிடம் மட்டும் தான் பேசுவேன்' என கூச்சலிட்டார்.
இதுகுறித்து கலெக்டர், மின்துறை அதிகாரிகள் மூலம் கேட்டபோது, 'சென்னையில் இருந்து வரக்கூடிய பயனாளிகள் பட்டியலில் சசிக்குமார் பெயர் இல்லை. இதனால் மின் இணைப்பு வழங்க முடியவில்லை' என தெரிவித்தனர். இதுகுறித்து சசிக்குமாரை அழைத்து, கலெக்டர் தெரிவித்தார். ஆனாலும் அவர், மின் இணைப்பு வழங்க வேண்டும் என கூச்சலிட்டார். இதனால் மேடையில் இருந்து சசிக்குமாரை, போலீசார் வலுக்கட்டாயமாக துாக்கிச்சென்று வெளியே விட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால், சசிக்குமார் அரை நிர்வாணமாக நின்றபடி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். விழா முடிந்து அனைவரும் சென்ற நிலையில் சசிக்குமரை போலீசார் சமாதானப்
படுத்தி அனுப்பினர்.இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் கூறுகையில், '2019க்கு பின், டாப்செட்கோ மூலம், மின் இணைப்பு வழங்க கோரி பயனாளிகள் பட்டியல் வரவில்லை' என்றனர்.

Advertisement