ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை; பொள்ளாச்சி கல்லுாரி மாணவி சோக முடிவு

1

தேனி : தேனி குன்னுார் வைகை ஆற்றின் அருகே செல்லும் தண்டவாளத்தில் போடி -சென்னை அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.

திண்டுக்கல் பஸ் டிரைவர் மணிகண்டன் 35, கோவை பொள்ளாச்சி கல்லுாரி மாணவி சம்யுக்தாவின் 21, உடல்கள் சிதறின. தற்கொலை குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா, ஆண்டிபட்டியை சேர்ந்த மணிகண்டன். இவரது மனைவி மருதநாயகி. திருமணம் முடித்து 2 ஆண்டுகள் ஆகி ஒன்றரை வயது மகன் உள்ளார். மணிகண்டன் பொள்ளாச்சி - கோவை பஸ்சில் டிரைவராக இருந்தார்.

பொள்ளாச்சி தாலுகா சூலேஸ்வரன்பட்டி அன்னை சத்யாநகர் ரத்தினசாமி மகள் சம்யுக்தா. கோவை தனியார் கல்லுாரியில் பி.காம்., படித்து வருகிறார். தினசரி மணிகண்டனின் பஸ்சில் சென்று வந்தார். இதில் மணிகண்டனுக்கும், சம்யுக்தாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 11ல் சம்யுக்தா மாயமானார். பொள்ளாச்சி போலீசில் மகளை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் தேடி வந்த நிலையில், மணிகண்டனும், சம்யுக்தாவும் டூவீலரில் நேற்று முன்தினம் இரவு தேனி வந்துள்ளனர்.

மதுரை ரோடு குன்னுார் வைகை ஆறு ரயில்வே மேம்பாலம் அருகே டூவீலரை நிறுத்தி விட்டு, இருவரும் தண்டவாளத்தில் ஏறி கட்டிப்பிடித்தவாறு நின்றனர். அந்த வழியே வந்த போடி -சென்னை சென்ட்ரல் ரயில் மோதியது. இருவரும் உடல் சிதறி பலியாகினர்.

சம்பவத்தை பார்த்த ரயிலின் லோகோ பைலட் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார்.

தேனி வி.ஏ.ஓ., ஜீவா புகாரில், மதுரை ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரிட்டா தலைமையிலான போலீசார், இறந்த இருவரின் உடல்பாகங்களை சேகரித்து, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் ஓட்டி வந்த டூவீலரை போலீசார் கைப்பற்றினர்.

Advertisement