கண்மாயில் கருவேல மரங்கள், மடை சேதம் சிக்கலில் ஆனையூர் கண்மாய்

சிவகாசி: கண்மாய் முழுவதும் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள், மடை சேதம், கரைகள் பலவீனம் என சிவகாசி அருகே ஆனையூர் கண்மாய் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது.

சிவகாசி அருகே ஆனையூர் கண்மாய் 50 ஏக்கர் பரப்பளவு, 50 ஏக்கர் பாசன வசதி உடையது. கண்மாயினை நம்பி நெல், வாழை, மிளகாய், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில் கண்மாயில் கழிவு நீர் தேங்குவதால் சாகுபடி பாதியாக குறைந்து விட்டது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்ட கண்மாய் தற்போது எதற்கும் பயன்படாத நிலைக்கு மாறிவிட்டது.

கண்மாயில் ஆங்காங்கே கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. தவிர மணல் அள்ளப்பட்டதால் ஆங்காங்கே பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது.

கண்மாயில் உள்ள மடை சேதமடைந்து விட்டதால் தண்ணீரை விவசாயத்திற்கு வெளியேற்றுவதற்கு வழி இல்லை. ரோட்டோரத்தில் உள்ள கரை முழுவதுமே பலவீனம் அடைந்து விட்டது. அவ்வப்போது கரையில் மண் சரிந்து விழுகின்றது.

கண்மாய் துார்வாரி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது கண்மாயில் ஆங்காங்கே கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது.

மேலும் பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. எனவே கண்மாயிலுள்ள கருவேல மரங்களை அகற்றி முழுமையாக துார்வார வேண்டும்.

கண்மாயில் கழிவுநீர்



சுரேஷ், தனியார் ஊழியர்: கண்மாய்க்கு வருகின்ற ஓடை முழுவதுமே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் முழுவதும் ஓடை வழியாக கண்மாய்க்கு வருகின்றது.

இதனால் கண்மாய் கழிவுநீராக மாறியதால் விவசாயம் பாதிக்கப்பட்டு விட்டது. மேலும் குடிநீர் ஆதாரமும் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே ஓடையை துார்வார வேண்டும்.

சரிந்த மண்



சமயமுத்து, தனியார் ஊழியர்: கண்மாய்க்கரை மிகவும் பலவீனமடைந்து காணப்படுகின்றது.

சிறிய மழை பெய்தாலும் மண் சரிந்து விழுகின்றது. ரோட்டோரத்தில் இருப்பதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே கரையை பலப்படுத்துவதோடு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.

மடை சேதத்தால் அல்லல்



மணிகண்டன், தனியார் ஊழியர்: கண்மாயில் உள்ள ஒரு மடையும் சேதமடைந்து விட்டது. மழைக்காலங்களில் தண்ணீர் வந்தாலும் விவசாயத்திற்கு தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. எனவே மடையை சீரமைப்பதோடு தண்ணீர் வெளியேறும் கால்வாயினையும் சீரமைக்க வேண்டும்.

Advertisement