மத்திய அமைச்சர் மீது அவதூறு: மின்னல் வேகத்தில் செயல்பட்டது போலீஸ்!

10

சென்னை: விபத்து வழக்கில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினர் கைதாகி இருக்கும் தகவலை தெரிவிக்க, அரசும், காவல் துறையும் காட்டிய மின்னல் வேகத்தை, மற்ற வழக்குகளிலும் காட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமி, 39, அவரது மனைவி மீனா, 31 ஆகியோர், சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில், விழுப்புரம் மேல்மலையனுார் கோவிலுக்குச் சென்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் டோல்கேட் அருகே சென்றபோது, விபத்தில் சிக்கினர். இதில், நாராயணசாமி பலியானார்; மீனா சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த விபத்தை ஏற்படுத்திய, சென்னையைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியர் அரவிந்த், 32, கைதாகி உள்ளார். அவர் கைதாகி இருக்கும் தகவலை தெரிவிக்க, அரசும், காவல் துறையும் மின்னல் வேகத்தில் செயல்பட்டன.

இது தொடர்பாக, அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார், செய்தியாளர்களின் 'வாட்ஸாப்' எண்ணுக்கு, விபத்தை ஏற்படுத்திய ஆடி கார், அதன் வாகன பதிவு எண்கள் உள்ளிட்ட விபரங்களை, அறிக்கையாக அனுப்பினர்.

அந்த அறிக்கையின் கீழ் பகுதியில், சட்டென தெரியும்படி குறிப்பு என தெரிவித்து, 'காரை ஓட்டி வந்த நபரின் அம்மாவின் சித்தி மகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்' என, அடையாளப்படுத்தி இருந்தனர்.


இந்த தகவலை, செய்தியாளர்களின் மொபைல் போன் எண்களுக்கு தொடர்பு கொண்டும் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்தபோது, அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் துாரத்து உறவினர் என்பதை தெரிவிக்கவில்லை; அவரிடம் சிபாரிசு பெறவும் முயற்சி செய்யவில்லை.

ஆனால், அரவிந்த் மத்திய நிதியமைச்சரின் உறவினர் தான் என்பதை தெரிவிக்க, அரசும், காவல் துறையும் காட்டிய வேகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இதே வேகத்தை, மற்ற வழக்குகளிலும் காட்டுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

Advertisement