ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் தேர்த்திருவிழா

அவிநாசி; அவிநாசி அருகே தேவ ராயம்பாளையத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில், மாசி மகத்தேர்த்திருவிழா, 5ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது.

6ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றம் நிகழ்ச்சிகளுடன் அபிஷேக ஆராதனை, சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்றது.

நேற்று விநாயகருக்கு 108 குடம் பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜை,ஸ்ரீ காமாட்சி அம்மன் தேருக்கு எழுந்தருளல், பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெற்றது. நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

தேர்த்திருவிழாவில், நேற்று மாலை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் ஸ்ரீ காமாட்சிதாச சுவாமி தலைமையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று வண்டித்தாரை, பரிவேட்டையும், நாளை மகா தரிசனம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. 15ம் தேதி ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெறுகிறது.

முன்னதாக, விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement