'நீரா' பானம் உற்பத்தி கட்டமைப்பு; தமிழக அரசிடம் எதிர்பார்ப்பு

பல்லடம்; 'நீரா' உற்பத்திக்கான கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என, பல்லடம் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், மக்களுக்கு ஆரோக்கியமான பானத்தை வழங்கும் நோக்கிலும், பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து 'தென்னீரா' என்ற பெயரில் 'நீரா' பானம் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல்வேறு முன்னணி நிறுவன குளிர்பானங்களுக்கு மத்தியில் 'நீரா' பானத்தை சந்தைப்படுத்துவது மிகவும் சவாலான காரியமாக உள்ளது.
இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மட்டுமே கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டும். இவற்றால், 'நீரா' அடக்க விலை உயர்கிறது. வெளிநாட்டு குளிர்பானங்களுடன் போட்டி போட்டு விற்பனை செய்ய அதிகளவு விளம்பரம் தேவைப்படுகிறது. பலரும் முயற்சி எடுத்து தோல்வியடைந்த 'நீரா' பானத்தை, திருப்பூர், பல்லடம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் பலரும் இணைந்து வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வருகிறோம்.
புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களால் இதனை செயல்படுத்த முடியாது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யவும், 'நீரா' பானம் தயாரிக்கும் கட்டமைப்புகளை மாவட்டம்தோறும் ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக, தென்னை விவசாயம் நிறைந்த பகுதிகளில் இதனை செயல்படுத்துவதன் வாயிலாக, குறைந்த விலைக்கு 'நீரா' பானம் தயாரித்து சந்தைப்படுத்த முடியும். எனவே, தமிழகம் முழுவதும், கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான உதவிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும். வேளாண் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நெரூரில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்; ஐகோர்ட் மதுரை கிளை தடை உத்தரவு
-
விடுதி உணவில் பிளேடு, புழு.. உஸ்மானிய பல்கலை மாணவர்கள் போராட்டம்
-
எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை
-
டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!