பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு; சி.பி.ஐ., விசாரணைக்கு கோர்ட் தடை

2


மதுரை: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக சி.பி.ஐ., பதிந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் வழக்கு தொடர்ந்தார். சி.பி.ஐ., விசாரணை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்தது.


தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்தார். அவர், 2018ல் ஓய்வு பெற்றார். சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ் மீது பொன்மாணிக்கவேல் வழக்கு பதிந்தார்.



காதர் பாஷா,'தீனதயாளனை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த நீதிமன்றம்,'சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும். முகாந்திரம் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.



சி.பி.ஐ., போலீசார் பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்தனர். அவருக்கு 2024 ஆக., 30ல் உயர் நீதிமன்றக் கிளை முன்ஜாமின் அனுமதித்தது. அவர் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி மதுரை கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை அந்நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. அதை எதிர்த்து பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றக் கிளையில் நிலுவையில் உள்ளது.


சி.பி.ஐ., பதிந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பொன் மாணிக்கவேல் மற்றொரு மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். சி.பி.ஐ., தரப்பு: விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நிலையில் உள்ளது. வழக்கு பதிந்து 7 மாதங்களுக்கு பின் தாமதமாக மனுதாரர் இந்த நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


நீதிபதி: சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மீது தற்போது வழக்கு (எப்.ஐ.ஆர்.,) பதிந்ததில் குற்றச்சாட்டுகள் பொருந்தும் வகையில் இல்லை. எப்.ஐ.ஆரில் போதிய விபரங்கள் இல்லை. வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கலாம் என இந்த நீதிமன்றம் கருதுகிறது.


சி.பி.ஐ., தரப்பு: மனுதாரர் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் உள்ளது. வழக்கு ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து ஏற்கனவே இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி விசாரணையை இன்று (மார்ச் 13) ஒத்திவைத்தார்.


இந்நிலையில், இன்று சி.பி.ஐ., விசாரணை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்தது.

Advertisement