மதம் மாற வற்புறுத்திய அப்ரிடி; பாக்., முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பகீர்

13


வாஷிங்டன்: பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய போது, தன்னை மதம் மாறுமாறு சக வீரர் ஷாகித் அப்ரிடி பலமுறை வற்புறுத்தியதாக அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா குற்றம்சாட்டியுள்ளார்.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 2000 முதல் 2010ம் ஆண்டு வரையில் விளையாடியவர் டேனிஷ் கனேரியா. முஸ்லீம் நாடு என்பதால், அந்நாட்டு கிரிக்கெட் அணியில் முஸ்லீம்களே இடம்பெற்று வருகின்றனர். இந்த சூழலில், அனில் தல்பத்திற்கு பிறகு பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய 2வது ஹிந்து வீரராக கனேரியா திகழ்ந்தார்.


சுழற் பந்து வீச்சாளரான கனேரியா, பாகிஸ்தானுக்காக 10 ஆண்டுகளில் 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 261 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். 15 முறை 5 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். 2012 ஆண்டு ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் கூறி, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி, அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.


இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தனக்கு நேர்ந்த சில சம்பவங்கள் குறித்து டேனிஷ் கனேரியா தற்போது வெளிப்படையாகக் கூறியுள்ளார்.


அவர் கூறியதாவது: பாகிஸ்தான் அணியில் மதத்தின் அடிப்படையில் பாகுபாடுகளை எதிர்கொண்டேன். இதனால், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை அழிக்கப்பட்டு விட்டது. பாகிஸ்தானில் எனக்கு சரிசமமான மதிப்பும், மரியாதையும் கிடைக்கவில்லை. நாங்கள் இப்போது அமெரிக்காவில் இருக்கிறோம். பாகிஸ்தானில் நாங்கள் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தோம் என்பதை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தவே, தற்போது பேசுகிறோம், எனக் கூறினார்.


முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி, தன்னை மதம் மாற வற்புறுத்தியதாக 2023ல் அளித்த இன்டர்வ்யூ ஒன்றில் கனேரியா கூறியிருந்தார். அது பற்றி அவர் பேசுகையில், "கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தேன். அப்போதைய கேப்டன் இன்ஜமாம் உல் ஹக் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். ஆனால், ஷோயப் அக்தர், ஷாகித் அப்ரிடி உள்பட பல பாகிஸ்தான் வீரர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர். என்னுடன் அமர்ந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். குறிப்பாக, ஷாகித் அப்ரிடி என்னை மதமாற்றம் செய்து கொள்ளும்படி பலமுறை வலியுறுத்தி கொண்டே இருந்தார். ஆனால், இன்ஜமாம் உல் ஹக் அதுபோன்று என்னிடம் நடந்து கொண்டதில்லை," எனக் கூறினார்.


பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணியில், வீரர்கள் தற்போது மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக சக வீரர் ஒருவரே குற்றம்சாட்டியிருப்பது உலகளவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisement