பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம்: முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு

சென்னை: நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட வீடியோவில், முதல்வர் ஸ்டாலின், நாடு முழுதும் பயன்படுத்தப்படும் ரூபாய்க்கான குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான 'ரூ ' என குறிப்பிட்டு உள்ளார். இந்த மாற்றத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
ரூபாய் என்பதை குறிப்பிட நாடு முழுவதும் தேவநாகிரி எழுத்துரு, கடந்த 2010ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசும், இந்த குறியீட்டை பயன்படுத்தி வந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், இந்திய அரசின் 14 அலுவல் மொழிகளில் ஒன்றை தான் முதல்வர் பயன்படுத்தி உள்ளார். இது தாய்மொழி மீதான பற்றை வெளிப்படுத்துகிறது. இது அரசியல்சாசனத்திற்கு எதிரானது இல்லை எனக்கூறப்பட்டு இருந்தது. இந்த மாற்றம் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2025 -26 ம் ஆண்டுக்கான தி.மு.க., அரசின் பட்ஜெட்டில், தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டு உள்ளது. இந்த குறியீடு, பாரதம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நமது நாணயத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன் ஆவார். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே தொகுதி மறுவரையறை மற்றும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய - மாநில அரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ள நிலையில், அடுத்ததாக இந்த விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தந்தை அங்கீகரித்ததை மகன் புறக்கணிக்கிறார்
ரூபாய்க்கான குறியீட்டை உருவாக்கிய உதயகுமார், தந்தையும் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தர்மலிங்கம், தாயார் ஜெயலட்சுமி, மூத்த சகோதரர் ராஜ்குமார், இளையசகோதரர் விஜயகுமார் ஆகியோருடன் சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடந்த 2010 ஜூலை 24 அன்று சந்தித்தார்.
இந்த புகைப்படத்தை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.
அத்துடன் பதிவில் கூறியுள்ளதாவது: ரூபாய்க்கான குறியீடு தேவநாகிரி முறையில் இருப்பதால் தான் அதனை நீக்கி உள்ளதாக, தமிழக மாநில திட்டக்குழு நிர்வாக துணைத்தலைவர் கூறியுள்ளார். இவரை போன்ற நபர்கள் முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்திருக்கின்றனர்.
திறமையற்றதை மறைக்க வெற்று விளம்பரங்களுடன், அர்த்தமற்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தந்தை அங்கீகரித்ததை மகன் புறக்கணிக்கிறார். இவ்வாறு அந்தப் பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.
ரூபாய்க்கான குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் அளித்த பேட்டி ஒன்றில், ' அரசு முடிவெடுத்து உள்ளது. இதற்கு உரிய காரணம் இருக்கும். அது எனக்கு தெரியாது. இதுவே எனக்கே செய்தியாக உள்ளது. என்ன சொல்வது என தெரியவில்லை. இக்குறியீடு 2010 முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசும் பயன்படுத்தியது. இதனை மாற்ற வேண்டும் என தமிழக அரசு நினைக்கலாம். அதற்கு காரணம் இருக்கலாம். தமிழக அரசின் செயலில் எந்த வருத்தமோ, கவலையோ இல்லை ' என்றார்.










மேலும்
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ராகுல்
-
திண்டுக்கல்லில் போக்குவரத்து விதி மீறியதாக 2416 வழக்குகள்: ரூ.6 லட்சம் அபராதம்
-
டோலி கட்டி தூக்கிச்சென்றும் பெண் உயிரை காப்பாற்ற முடியவில்லை; கொடைக்கானல் கிராமத்தினர் கண்ணீர்!
-
ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு
-
பார்க்கிங் பிரச்னையால் உயிரிழந்த விஞ்ஞானி: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்