அரசு பணியாளர் போட்டி தேர்வுகளை மராத்தியில் நடத்த மஹா., அரசு முடிவு

15

மும்பை :“மஹாராஷ்டிர அரசு பணியாளர்கள் தேர்வு ஆணைய தேர்வுகள் அனைத்தும் மராத்தி மொழியில் நடத்தப்படும்,” என, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுகளில், வேளாண் மற்றும் பொறியியல் துறை பணிகளுக்கான தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவது குறித்து, சிவசேனா உத்தவ் பிரிவு எம்.எல்.ஏ., மிலிந்த் நர்வேக்கர், சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, முதல்வர் பட்னவிஸ் அளித்த பதில்:

பொதுவாக மாநில அரசு பணிகளுக்கான தேர்வு, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. வேளாண் மற்றும் பொறியியல் துறை பணிகளுக்கான ஒருசில தேர்வுகளை மட்டும் ஆங்கிலத்தில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

அந்த தேர்வுகளுக்கான பாடப் புத்தகம் மராத்தியில் இல்லாததே அதற்கு காரணம். அந்த பாடப் புத்தகங்களை மராத்தியில் தயார் செய்யும் பணியை மாநில அரசு துவக்கிஉள்ளது.

பொறியியல் படிப்புகளை மராத்தியில் நடத்த புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. எனவே, மாநில அரசு பணியாளர்கள் தேர்வு ஆணைய தேர்வுகள் அனைத்தும் மராத்தி மொழியிலேயே நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'ஏர்டெல்' ஊழியர் பேச்சால் சர்ச்சை

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த நபர், சேவை குறைபாடு குறித்து புகார் அளிப்பதற்காக, 'ஏர்டெல்' தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை மையத்திற்கு சென்றார். அங்கு பணியாற்றும் பெண்ணிடம் இவர் மராத்தியில் பேசினார். அந்த பெண்ணுக்கு மராத்தி தெரியாததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, 'நான் ஏன் மராத்தி பேச வேண்டும்? மஹாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும் என விதி உள்ளதா? ஹிந்துஸ்தானில் யாரும் எந்த மொழியிலும் பேச உரிமை உள்ளது' என்றார்.இந்த உரையாடலை, 'வீடியோ' பதிவு செய்த வாடிக்கையாளர், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். 'மஹாராஷ்டிராவையும், மராத்தியர்களையும் அவமதித்த ஊழியரின் செயலுக்காக ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என மாநில பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement