பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; மளிகை பொருட்கள் வாங்க சென்றபோது கொடூரம்

சண்டிகர்: பஞ்சாபில் மளிகை பொருட்கள் வாங்க சென்ற சிவசேனா தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


மோகா மாவட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் மாவட்ட தலைவர் மங்கத் ராய்(52). சம்பவத்தன்று இவர் தமது வீடு அருகே உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்க வந்துள்ளார்.


அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், மங்கத் ராயை துப்பாக்கியால் சுட்டனர். முதல் முறை சுடும்போது அவர் தப்பிவிட, அருகில் இருந்து 12 வயது சிறுவன் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.


சுதாரித்த மங்கத் ராய் இருசக்கர வாகனத்தில் தப்பிக்க, அவரை மற்றொரு வாகனத்தில் துரத்தியபடியே சென்ற மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மங்கத் ராயை அங்குள்ளோர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். சம்பவத்தை அறிந்த போலீசார் மங்கத் ராய் மனைவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement