ரன்யா வீடு உட்பட 9 இடங்களில் 'ரெய்டு' அமலாக்க துறையும் களம் இறங்கியதால் பரபரப்பு

பெங்களூரு: தங்கம் கடத்தலில் கைதான நடிகை ரன்யா ராவ் வீடு, அவரது நண்பர் தருண் வீடு உட்பட பெங்களூரில் ஒன்பது இடங்களில், அமலாக்க துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
வருவாய் புலனாய்வு பிரிவு, சி.பி.ஐ.,யை தொடர்ந்து, இந்த வழக்கில் அமலாக்க துறையும் களம் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ரன்யா ராவ் தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ், விடுமுறையில் சென்று உள்ளார். அவருக்கு அரசு கட்டாய விடுப்பு அளிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட நடிகை ரன்யா ராவ், 33. இவர், கர்நாடக வீட்டுவசதி துறை கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள்.
துபாயில் இருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான 14.8 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக, கடந்த 3ம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்தில், டில்லி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது ரன்யா ராவ் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவரது முன்னாள் காதலனும், தொழில் அதிபருமான தருண் கொண்டரு ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரன்யா கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் டில்லி விமான நிலையத்திலும், தங்கம் கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
வலை அமைப்பு
அந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளும், ரன்யா ராவிடம் இருந்து பறிமுதல் செய்த தங்கக் கட்டிகளும் ஒரே மாதிரியாக இருந்ததால், இந்த வழக்கின் பின்னணியில், பெரிய நெட்ஒர்க் இருக்கலாம் என்று, சி.பி.ஐ.,க்கு, வருவாய் புலனாய்வு பிரிவினர் தகவல் கொடுத்தனர்.
இதனால், ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கை, சி.பி.ஐ.,யும் ஒரு பக்கம் விசாரிக்கிறது. பெங்களூரு விமான நிலையத்தில் பணியாற்றும் சிலரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல் பெற்று உள்ளனர்.
முன்னாள் காதலன் தருண் கூறியதன்படி, துபாயில் இருந்து ரன்யா ராவ் தங்கம் கடத்தினார். பெங்களூரில் இருந்து துபாய்க்கு ஹவாலா பணத்தை தருண் அனுப்பி உள்ளார்.
அதற்கு அங்கிருந்து தங்கம் கிடைத்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது பற்றி, அமலாக்க துறைக்கும் தகவல் கிடைத்தது.
கிரெடிட் கார்டு
இதன்படி, வழக்குப்பதிவு செய்த அமலாக்க துறையினர், பெங்களூரில் ரன்யா ராவ், தன் கணவர் ஜதினுடன் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு, தருணின் வீடு உட்பட ஒன்பது இடங்களில், நேற்று காலை 6:00 மணி முதல் சோதனை நடத்த ஆரம்பித்தனர். மதிய உணவு சாப்பிட கூட செல்லவில்லை; வீட்டிற்கே வரவழைத்து சாப்பிட்டனர்.
இந்த சோதனையின் போது தருண், ரன்யா ராவ் வீட்டில் இருந்து, டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்க துறை கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று மாலை வரை சோதனை நீடித்தது. இது ஒரு பக்கம் இருக்க, ரன்யா ராவின் கணவர் ஜதினுக்கு சொந்தமான எட்டு இடங்களில், வருவாய் புலனாய்வு பிரிவினரும் நேற்று சோதனை நடத்தினர்.
குறிப்பாக, காடுகோடியில் உள்ள ஜதின் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. ஜதினுக்கும், ரன்யா ராவுக்கும் திருமணம் முடிந்து, மூன்று மாதங்கள் தான் ஆகிறது.
அவர்கள் இருவருக்கும் பிரச்னை இருப்பதாக கூறப்பட்டாலும், ரன்யா ராவ்
தொடர்ச்சி 4ம் பக்கம்
ரன்யா வீடு உட்பட...
முதல் பக்கத் தொடர்ச்சி
துபாய் செல்ல, ஜதின் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி தான், விமான டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளதை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ரன்யா ராவ் தங்க கட்டிகள் கடத்தியது பற்றி, வருவாய் புலனாய்வு பிரிவும், இந்த வழக்கில் உள்ள நெட்ஒர்க் பற்றி சி.பி.ஐ.,யும், சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து, அமலாக்க துறையும் விசாரிக்கின்றன. ஒரே வழக்கில் மூன்று விசாரணை அமைப்புகளும், கைகோர்த்து இருப்பது ரன்யா ராவிற்கு நெருக்கடியை அதிகப்படுத்தி உள்ளது.
தலைமைக்கு விளக்கம்
இந்த வழக்கில் அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதுபற்றி கர்நாடக காங்கிரசிடம், கட்சி மேலிடம் விளக்கம் கேட்டது. அதற்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், 'வழக்கில் எந்த அமைச்சருக்கும் தொடர்பு இல்லை. அரசியலுக்காக பா.ஜ., தலைவர்கள் பொய் சொல்கின்றனர்' என்று கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரன்யா ராவ், ஒவ்வொரு முறை தங்கம் கடத்தி வரும் போதும், விமான நிலைய சோதனையில் இருந்து தப்பிக்க, கூடுதல் டி.ஜி.பி.,யான தனது தந்தை ராமச்சந்திர ராவ் பெயரை பயன்படுத்தி உள்ளார். இதனால் வழக்கில் கூடுதல் டி.ஜி.பி.,க்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரிக்க, கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் எந்த நேரத்திலும், விசாரணைக்கு ஆஜராக ராமச்சந்திர ராவுக்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு உள்ளது. தற்போது ராமசந்திர ராவ் விடுமுறையில் உள்ளார். அவருக்கு கட்டாய விடுமுறை அளிக்கவும், அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
வாபஸ் ஏன்?
ரன்யா ராவுக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட, 'புரோட்டாகால்' சலுகை பற்றி விசாரிக்க சி.ஐ.டி.,க்கு, உள்துறை உத்தரவிட்டது. நேற்று முன்தினம் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று விளக்கம் அளிக்கையில், ''புரோட்டாகால் தவறாக பயன்படுத்தப்பட்டதா என்று விசாரிக்க, நாங்கள் சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டோம். முதல்வர் அலுவலகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. ஒரே விஷயம் இரண்டு முறை விசாரிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இதனால் சி.ஐ.டி., விசாரணையை திரும்ப பெற்றோம். யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை,'' என்றார்.
=========
=======
தருணும் நடிகர்
ரன்யா ராவின் முன்னாள் காதலன் தருண் தொழில் அதிபர் மட்டும் இல்லை. அவரும் ஒரு திரைப்பட நடிகர். தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து உள்ளார். கடந்த 2018ல் தெலுங்கில் வெளியான, பரிச்சயம் என்ற படத்தில் நடித்து இருந்தார். சினிமாவுக்காக தனது பெயரை விராட் கொண்டரு ராஜு என்று மாற்றி உள்ளார். ஆனால் சினிமாவில் பெரிய அளவில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. ரன்யா ராவும் அப்படி தான். அவரும் வெறும் மூன்று படங்களில் மட்டுமே நடித்து உள்ளார்.
=========
ஜெயமாலாவுக்கு உறவு
நடிகை ஜெயமாலாவின் மகள் சவுந்தர்யா. நடிகையான இவருக்கும், ருஷப் என்பவருக்கும் கடந்த மாதம் 7ம் தேதி திருமணம் நடந்தது. ருஷப், ராமச்சந்திர ராவின் மகன் ஆவார். தனது சகோதரர் திருமணத்தில் ரன்யா ராவும் பங்கேற்றார்.
***
ரன்யா திருமணத்தில் சித்து
தங்கம் கடத்தலில் கைதான ரன்யா ராவுக்கும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஜதினுக்கும், கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி திருமணம் நடந்தது. திருமண வரவேற்பில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
நடிகையருக்கு பீதி
கன்னட நடிகையர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லக் கூடியவர்கள். அங்கு எடுக்கும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுவர். ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட பின், துபாய்க்கு சுற்றுலா சென்று வந்த நடிகையருக்கு பீதி ஏற்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிட்ட துபாய் புகைப்படங்களால், நமக்கும் ஏதாவது பிரச்னை வருமோ என்று ஆதங்கத்தில் அவற்றை நீக்க ஆரம்பித்து உள்ளனர்.

மேலும்
-
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்கம் விலை: சவரன் ரூ.66,400 ஆக விற்பனை!
-
தமிழக அரசின் வரம்புக்குள் தான் கடன் இருக்கிறது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்
-
பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; மளிகை பொருட்கள் வாங்க சென்றபோது கொடூரம்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?