கைதிகள் தயாரிப்பு பொருட்களில் போலி 'பில்' மோசடி; பெண் எஸ்.பி., உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

10

சென்னை: மதுரை சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்றதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரில், பெண் எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.



மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படும்.


இந்த பொருட்களை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் போது கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாகவும், அரசு அலுவலகங்களில் குறைவான விலைக்கு விற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும் போலி பில்கள், ஆவணங்கள் மூலம் பலகோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் பறந்தன. தொடர் புகார்களின் படி 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ரூ.1.63 கோடி முறைகேடு நடந்ததாக மதுரை சிறையில் எஸ்.பி.,யாக இருந்த ஊர்மிளா, பாளையங்கோட்டை ஏ.டி.எஸ்.பி., வசந்த கண்ணன், வேலூர் சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன், வியாபாரிகள் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.


இந் நிலையில், இந்த வழக்கில் எஸ்.பி. ஊர்மிளா (தற்போது புதுக்கோட்டை மத்திய சிறை எஸ்.பி.யாக உள்ளார்) வசந்த கண்ணன், தியாகராஜன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை டி.ஜி.பி., பிறப்பித்துள்ளார்.

Advertisement