சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை

11


சென்னை: '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது, '' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை கூறியதாவது: உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு கடன் வாங்கவில்லை. தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியாத அளவு தமிழகம் தத்தளிக்கிறது.1,62,096 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு உள்ளது. தமிழகத்தை விட பிற மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. வெற்று காகிதம் போல் பட்ஜெட் உள்ளது.

வட்டி மட்டும்



இந்த பட்ஜெட்டால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு சொன்ன திட்டங்களுக்கு நிதி அறிவிக்கப்படவில்லை. டாஸ்மாக் வருமானத்தை வைத்து கடன் வாங்கியதுதான் நாட்டிற்கு வழிகாட்டியா? 10 லட்சம் கோடி கடனை நெருங்கும் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. சட்டசபையில் அவர்களாகவே பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். அவர்களாவே புகழ்கிறார்கள். இந்த பட்ஜெட்டிற்கு பதில் வெள்ளை காகிதத்தை கொடுத்திருக்கலாம். தமிழகத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஆறாம் தலைமுறை வரை கடனுக்கு வட்டி மட்டும் கட்டும் சூழ்நிலையில் தமிழகம் உள்ளது.

தப்ப முடியாது



டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வரவில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புபோலீசார் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். டாஸ்மாக் போக்குவரத்து துறையை மையப்படுத்தி ரூ.100 கோடி ஊழல் நடந்துள்ளது. மதுபான ஆலைகளில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ஒரு பெரிய ஊழல் நடந்துள்ளது. எங்கேயும் தப்பித்து போக முடியாது. அமலாக்கத்துறை நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் . அவர் வகிக்கும் துறை மீண்டும் அமலாக்கத்துறையிடம் சிக்குகிறது.

போராட்டம்



டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் அதன் தலைமை அலுவலகத்தை வரும் 17 ம் தேதி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அடுத்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடுவோம். தமிழக அரசு பதில் சொல்லும் வரை, அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும். அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறேன். இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்



கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. கல்வியில் மாநில அரசுக்கு உள்ள உரிமை போல், மத்திய அரசுக்கும் உள்ளது. இவர்கள் இஷ்டத்திற்கு ஆட்சி நடத்துவதற்கு அரசியலமைப்பின்படி அவர்களுக்கு உரிமை இல்லை. அமைச்சர் தியாகராஜனின் மகன் இருமொழி படிக்கிறார். முதல்மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழி பிரெஞ்ச். இது தான் அவர்களின் இரு மொழிக் கொள்கை. ஒவ்வொரு அமைச்சரும் பொய் பேச ஆரம்பித்தால், அவர்களின் குழந்தைகள் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று புகைப்படம் எடுப்பது தான் எனது வேலையா
அமைச்சர்கள் மக்களின் வரிப்பணத்தில் வாழ்கின்றனர். அவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும். நான் பேசவில்லை. தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் அவர்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெளியிடுகிறேன். பிறகு அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.


அனுமதி கிடையாது





மேகதாது விவகாரத்தில் கர்நாடக பாஜ.,வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த நாங்கள் சென்னை வரும் சிவக்குமாரை எதிர்த்து கருப்புக் கொடி காட்ட மாட்டோமா?
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு முன்பும் அனுமதி கொடுக்கவில்லை. தற்போதும் கொடுக்க மாட்டோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement