2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி

5


புதுடில்லி: வரும் 2028ல் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5.7 டிரில்லியன் டாலராக உயரும். அதன் மூலம் உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என முன்னணி நிதிச் சேவை நிறுவனம் மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.


மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிதிச்சேவை நிறுவனம். இந்த நிறுவனம் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கடந்த 2023ல் 3.5 டிரில்லியன் டாலர்கள் பொருளாதார மதிப்புடன் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியது. வரும் 2026ல் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 4.7 டிரில்லியன் டாலர்களாக உயரும். அப்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.


வரும் 2028ம் ஆண்டிற்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, 5.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடன் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும். கடந்த 1990ம் ஆண்டில் உலகின் 12வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, 2000ம் ஆண்டில் 13வது இடத்துக்கு பின்தங்கியது. 2020ல் 9ஆவது இடத்துக்கும், 2023ல் 5ஆவது இடத்துக்கும் முன்னேறியது.


உலகின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரிக்கும். வலுவான மக்கள்தொகை வளர்ச்சி, துல்லியமான ஜனநாயகம், பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையால் வரும் ஆண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு உயரும்.


உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும், 2025ம் ஆண்டில் இந்திய பங்குகள் விலைகள் அதிகரிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement