தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி

1

பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


கன்னட நடிகை ரன்யா ராவ், 33. இவர், கர்நாடக வீட்டுவசதி துறை கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள். துபாயில் இருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான 14.8 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக, கடந்த 3ம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்தில், டில்லி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


விசாரணையின் போது ரன்யா ராவ் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவரது முன்னாள் காதலனும், தொழில் அதிபருமான தருண் கொண்டரு ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரன்யா ராவ் ஜாமினகேட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம், அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. வழக்கில் கைதான மற்றொரு குற்றவாளி தருணை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement