மனைவியின் ஆபாச அரட்டையை சகிக்க முடியாது: விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் கருத்து

1



போபால்: விவாகரத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், 'மனைவி தன் ஆண் நண்பர்களுடன் ஆபாசமாக உரையாடுவதை எந்த கணவனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது' என, தெரிவித்துள்ளது.


மத்திய பிரதேசத்தில், 2018ல் திருமணம் செய்த தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, கணவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.



அந்த மனுவில், 'தன் மனைவி திருமணத்துக்கு பிறகு முன்னாள் காதலர்கள், ஆண் நண்பர்களுடன் மொபைல் போனில் உரையாடினார்.

மிகவும் ஆபாசமான, 'வாட்ஸாப்' அரட்டைகளில் ஈடுபட்டார்' என, அவர் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கு விசாரணையின் போது, 25 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக மனைவி தெரிவித்தார். வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், அவர்களுக்கு விவாகரத்து அளித்தது.


இதை எதிர்த்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


திருமணத்துக்கு பின் கணவன் - மனைவி தன் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசவோ, வாட்ஸாப் அரட்டை அடிக்கவோ உரிமை உள்ளது. ஆனால், அவை கண்ணியமாக இருக்க வேண்டியது அவசியம். அதுவும் குறிப்பாக எதிர்பாலினத்தவர்களுடன் பேசும் போது கண்ணியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.


மனைவி, ஆண் நண்பர்களுடன் தன், 'செக்ஸ்' வாழ்க்கை குறித்தும், ஆபாசமாகவும் பேசுவதை எந்த கணவனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.



இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், தொடர்ந்து அதைச் செய்வது மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த வழக்கில், பெண்ணின் தரப்பில் தவறு இருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல ஆண் நண்பர்கள் இருப்பதை அவரது தந்தையே உறுதி செய்துள்ளார்.



எனவே, குடும்பநல நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement