தடுப்பணை உயரம் குறைவால் வறண்ட அய்யலுார் குளம்

வடமதுரை: வரட்டாற்றில் நீர் வரத்து இருந்தும் சேகரிக்கும் வாய்ப்பை பயன்படுத்த தவறியதால் அய்யலுார் தும்மினிக்குளம் கண்மாய் நீரின்றி வறண்டு கிடக்கிறது.

அய்யலுார் அடுத்த முடிமலை, புத்துார் பகுதி மலைகளில் உருவாகும் இரண்டு காட்டாறுகள் கெங்கையூரில் ஒன்று சேர்கின்றன. இங்கு கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து ஒரு வாய்க்கால் மூலம் கஸ்பா அய்யலுார், களர்பட்டி வழியே தும்மனிக்குளத்திற்கு நீர் கொண்டு வரப்படுகிறது. இக்குளம் ஒரு முறை நிரம்பினால் 5 ஆண்டுகளுக்கு சுற்றுப்பகுதி கிணறுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மறுகால் பாதையில் அமைந்துள்ள முராரிசமுத்திரம், உப்புகுளம், செய்யார்ராவுத்தர்குளம், உடைகுளம் என பல குளங்களுக்கு நீர் செல்லும். இதன் மூலம் பாலக்குறிச்சி, வடுகபட்டி, சித்துவார்பட்டி, வேங்கனுார் பல கிராமங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அய்யலுார் பேரூராட்சி நிர்வாக குடிநீர் சப்ளைக்கும் உதவும்.

தும்மனிக்குளத்திற்கான தடுப்பணை நீர் வரத்து வாய்க்கால் 23 முதல் 27 அடி அகலமாக இருந்தது. வாய்க்கால் ஓரத்தில் இருந்த ஒற்றையடி பாதை ரோடான பரிமான வளர்ச்சி பெற்ற பின்னர் பல இடங்களில் வாய்க்கால் மிகவும் குறுகலாகி பராமரிப்பு இல்லாமல் சில இடங்களில் மண்மேவி மூடப்பட்டுள்ளது. தும்மினிக்குளம் பேரூராட்சி பராமரிப்பிலும், வாய்க்கால், தடுப்பணை பராமரிப்புகள் பொதுப்பணித்துறை வசமும் உள்ளன. எப்போதாவது சிறிய ,கன மழை பெய்யும்போது ஆற்றில் நீர் பெருக்கெடுத்து செல்லும். ஆனால் தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால் இயல்பான சரிவு மட்டம் கிடைக்காமல் தும்மினிக்குளத்திற்கு நீர் செல்வதில்லை. இதனால் நீர் வரத்து வாய்ப்பிருந்தும் பயன்படுத்தாத நிலை உள்ளது. அடுத்த மழை காலத்திற்குள் தடுப்பணை மட்டத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளத்தை மீட்க சட்ட போராட்டம்



எஸ்.பி.செம்பன், விவசாயிகள் சங்க தலைவர், அய்யலுார்:1905ல் குளத்தின் பரப்பளவு 37 ஏக்கராக இருந்து கால போக்கில் சுற்றிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து நீர் பிடிப்பு பரப்பு வெகுவாக குறைந்துள்ளது. தும்மனிக்குளம் மூலம் 1500 ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெற்றது. கெங்கையூர் தடுப்பணையின் உயரம் குறைவாக இருப்பதால் உள்பகுதியில் மண் கரை அமைத்தால் மட்டும் நீர் குளத்திற்கு செல்லும் நிலை உள்ளது. குளத்தை மீட்க பல ஆண்டுகளாக சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

-உயரமாக்குவது அவசியம்



எஸ்.மகிடேஸ்வரன், நீர்நிலை ஆர்வலர், அய்யலுார் : தடுப்பணையை முறையாக மறுகட்டமைப்பு பணி செய்து உயரமாக்க வேண்டியது அவசியம். ரோடு அமைந்ததால் குறுகிய இடங்களில் தனியார் இடங்களை பெற்று தடையின்றி நீர் செல்லும் வகையில் ஓடையை அகலமாக்குவது அவசியம். நில அளவீடு பணிக்கான 'டோட்டல் ஸ்டேஷன்' கருவி மூலம் குளத்தை அளந்தபோது 37 ஏக்கருக்கு பதில் 22 ஏக்கர் நிலமே நீர்பிடிப்பு பகுதியாக இருப்பது தெரிந்தது. ஒவ்வொரு முறையும் தடுப்பணைக்குள் மண் கரை அமைத்தால் மட்டுமே நீர் குளத்திற்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஆற்றில் நீர் இருந்தபோது மண் கரை அமைக்க தாமதம் ஆனதால் குளத்தை நிரப்ப முடியாமல் போனது.

Advertisement