13 நாட்களில் 67,000 மாணவர்கள் அரசு தொடக்க பள்ளிகளில் சேர்ப்பு

2

சென்னை: அரசு தொடக்க பள்ளிகளில், 13 நாட்களில், 67,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ், 37,553 பள்ளிகள் இயங்குகின்றன. ஆங்கில கல்வியில் குறைபாடு, ஆசிரியர்கள் பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் தயங்கும் சூழல், 25 ஆண்டுகளாக நீடித்தது.

இதனால், பல பள்ளிகளில், ஒரு வகுப்பில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே, குழந்தைகள் படிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளிகள் இணைப்பு, உபரி ஆசிரியர்கள் இடம் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை, பள்ளிக்கல்வி துறை எடுத்து வந்தது.



இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு பின், வகுப்பறைகளையே திறக்காமல், கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகளால் பாதிக்கப்பட்ட பெற்றோர், தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வந்தனர்.


அதேநேரம், ஆசிரியர்களும் தங்களின் பணியிடத்தை காப்பாற்றும் வகையில், அதிக மாணவர்களை சேர்க்கத் துவங்கினர். இதை, பள்ளிக் கல்வி துறையும் ஊக்குவித்தது.மேலும், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி, இல்லம் தேடி கல்வி, எண்ணும்- எழுத்தும், காலை உணவு, 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் உள்ளிட்ட திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்த துவங்கியதால், பெற்றோருக்கு, தங்களின் குழந்தைகளை அரசு தொடக்க பள்ளிகளில் சேர்க்கும் ஆவல் வந்துள்ளது.


இந்நிலையில், இம்மாதம், 1ம் தேதி முதல் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில், 13ம் தேதி வரையிலான, 13 நாட்களில், 67,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, தொடக்கக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், மாணவர்களுக்கு அரசு செயல்படுத்தும் இலவச திட்டங்களை எடுத்துக் கூறி, பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, புதிதாக ஐந்து லட்சம் மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement