வேளாண் பட்ஜெட் எப்படி? தலைவர்கள் கருத்து

சென்னை: சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, முதல்வரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள், புதிய தொழில்நுட்பங்கள்,
சிறு, குறு விவசாயிகள் நலன், மலை வாழ் உழவர் முன்னேற்றத் திட்டம், டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.
ஏமாற்றும் பட்ஜெட்
இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதாவது: விவசாயிகளுக்கு என்று தனியாக வேளாண் பட்ஜெட் என்பது போலியானது. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட். விவசாயிகளை ஏமாற்றுவதில் தி.மு.க.,வினர் வல்லவர்கள் என்று நிரூபித்துள்ளனர். தனி பட்ஜெட் என்று கூறி விவசாயிகளை தி.மு.க., அரசு ஏமாற்றி உள்ளது. வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை என்று எதுவும் இல்லை.
அவியல், கூட்டு
5வது முறையாக 1.30 மணி நேரம் பட்ஜெட் வாசித்துள்ளனர். இது தான் சாதனை. வேளாண் துறை சார்ந்த பல துறைகளை ஒன்றாக இணைத்து அவியல், கூட்டு போல ஒரு பட்ஜெட். பல துறைகளை ஒன்றிணைத்து அவியல், கூட்டு போன்று ஒரு வேளாண் பட்ஜெட்டை அறிவித்து உள்ளனர். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் புதிதாக ஏதுமில்லை. ஆண்டு தோறும் விவசாயிகளின் சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
ரூ. 40 லஞ்சம்
சாகுபடி பரப்பளவை உயர்த்த எந்த திட்டமும் இல்லை. நெல், பருத்தி, கரும்பு ஆகிய பயிர்களின் உற்பத்தி திறன் தொடர்ந்து குறைந்து வருகிறது. விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 40 லஞ்சம் கேட்கிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
நிறைய கடன்
நிதி மேலாண்மை நிபுணர் குழு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அரசு நிறைய கடன் வாங்கி உள்ளது. கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது என்பது தான் தி.மு.க., அரசின் சாதனை. நிதி மேலாண்மையை சரி செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு என்ன செய்தது? கடன் வாங்குவதில் தி.மு.க., அரசு சாதனை செய்துள்ளது. தமிழக அரசு கடனில் மூழ்கி உள்ளது. அவலநிலையை தி.மு.க., அரசு ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது தி.மு.க., அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். தி.மு.க.,வின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.
சாகுபடிப் பரப்பு
கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023ம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 - 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க.,?
பொய், புரட்டு
பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு.
ஒன்றுமில்லை
தி.மு.க., அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?
நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் தி.மு.க., அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை.
பா.ம.க.,எம்.எல்.ஏ., ஜி.கே மணி
வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளித்துள்ளதை வரவேற்கிறோம். வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு விற்பனைக் கிடங்கு அமைக்க வேண்டும்.
பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்
வேளாண் பட்ஜெட்டில் ஒவ்வொரு தலைப்பின் கீழ் பார்த்தால் சிறு தானியங்கள் உள்ளிட்டவற்றில் கூடுதலாக தொகை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்கள்.
பிரதமர் மோடியின் திட்டங்களை இவர்கள் அமல்படுத்துகிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
பருவ கால பாதிப்பு உள்ளிட்டவற்றிக்கு ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்வதற்காக ஒரு பெரிய திட்டங்கள் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மேலும்
-
கோவில் ஊழியர் மீது ஆசிட் வீச்சு; தெலங்கானாவில் பயங்கரம்
-
தத்தெடுப்புக்கு 2000 குழந்தைகள் காத்திருப்பு: மேற்குவங்கத்தில் தான் அதிகம்
-
நினைவில் வாழும் டாக்டர் சாந்தா
-
அசாமில் அமைதி ஏற்படுவதை காங்., விரும்பவில்லை: அமித்ஷா
-
அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்; எலான் மஸ்க் நம்பிக்கை
-
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை