கோவில் மீது வெடிகுண்டு வீச்சு பஞ்சாபில் இருவருக்கு வலை
அமிர்தசரஸ்: பஞ்சாபில் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள கோவில் மீது பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
பஞ்சாபில் உள்ள அமிர்தசரசின் கந்தவாலா அருகே தாகுர் துவாராவில் ஹிந்து கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலுக்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென கோவிலின் முன் நின்றபடி சக்தி வாய்ந்த குண்டை வீசி தப்பிச் சென்றனர்.
இதில், கோவில் சுவர் மற்றும் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தன. கோவில் பூசாரி அளித்த தகவலின் அடிப்படையில், தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து, அங்கு தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து அமிர்தசரஸ் போலீஸ் கமிஷனர் குர்பிரித் சிங் புல்லார் கூறுகையில், ''கோவில் பூசாரி அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம்.
''வெடிகுண்டு வீச்சில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்,'' என்றார்.