தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்; பா.ஜ.,

ராமநாதபுரம்:'ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு துாண்டிய தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்' என, பா.ஜ., மாநில பொதுச்செயலர் பொன்.பாலகணபதி தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில், 129 டாஸ்மாக் கடைகளில் நான்கு விதங்களில் ஊழல் நடந்துள்ளது. உரிமம் இல்லாமல் மதுக்கூடம் நடத்தி ஊழல் செய்துள்ளனர்; பாட்டிலுக்கு 30 -- 40 ரூபாய் அதிக விலை வைத்து விற்பனை செய்துள்ளனர்.

சாராய ஆலைகளில் இருந்து, வரி செலுத்தாமல் லட்சக்கணக்கான பாட்டில்கள் விற்பனைக்கு வந்துஉள்ளன.

இதில், ராமநாதபுரத்தில் மட்டும் மாதம், 25 கோடி ரூபாய் ஊழல் நடந்து வருகிறது.

இந்த தொகையை அமைச்சர், தி.மு.க., நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கு பிரிக்கின்றனர். ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகம் முன், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேது மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

அவரை தாக்கி, தற்கொலைக்கு துாண்டியவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

தி.மு.க., மாவட்ட செயலருக்கு நெருக்கமானவரான பாபாமுருகன் மீது தற்கொலைக்கு துாண்டிய வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பா.ஜ., சார்பில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement