கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை,:மாசாணி அம்மன் கோவில் நிதியிலிருந்து, 13.84 கோடி ரூபாய் செலவில், 'ரிசார்ட்' கட்டப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில், பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை, 100 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு தொகையாக வைக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தில் இருந்து, 13.84 கோடி ரூபாய் எடுத்து, ஊட்டியில் காந்தல் வட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே, 'ரிசார்ட்' கட்ட, ஹிந்து அறநிலைய துறை முடிவு செய்துள்ளதாக, கடந்தாண்டு டிச., 24ல் அரசாணை வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, அந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, ''கோவில் நிதியை கோவில் நலன் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும். இது தொடர்பாக, பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறும் வகையில், தமிழக அரசின் அரசாணை உள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ஹிந்து அறநிலையத் துறை சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன், மாசாணி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், ஆர்.பரணிதரன் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, 'அரசாணையில் ரிசார்ட் என்ற வார்த்தை தவறுதலாக இடம் பெற்றுள்ளது. பக்தர்களுக்கான குடியிருப்புகள் தான் கட்டப்பட்ட உள்ளன. எனவே, அரசாணை திருத்தி வெளியிடப்படும்' என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், 'அரசாணையை திரும்ப பெற வேண்டும் அல்லது இடைக்கால தடை விதிக்கப்படும்' என்றனர். உடனே, 'ரிசார்ட்' கட்டும் அரசாணையை திரும்ப பெற்று கொள்வதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Advertisement