கோடையிலும் குளிருது மூணாறு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மூணாறு:கேரள மாநிலம் மூணாறில் கோடை காலம் துவங்கி விட்டபோதும் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மூணாறில் ஆண்டு தோறும் மார்ச்சில் கோடை காலம் துவங்கி மே இறுதி வரை நீடிக்கும். தற்போது இடுக்கி மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால், அதனை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட மூணாறில் புற ஊதா கதிர் வீச்சு அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மூணாறில் கோடை துவங்கிய பிறகும் வழக்கத்துக்கு மாறாக அவ்வப்போது குளிர் அதிகரித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் காலை வேளையில் குறைந்தபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதேபோல் நேற்று காலை வெப்ப நிலை 4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானதால் குளிர் அதிகரித்தது. மதியம் வெப்ப நிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.

மூணாறு அருகே செண்டுவாரை, லெட்சுமி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 3 டிகிரி, சிவன்மலை எஸ்டேட் 4 டிகிரி, மாட்டுபட்டி, தேவிகுளம் ஆகிய எஸ்டேட்டுகளில் 5 டிகிரி, சைலன்ட் வாலி எஸ்டேட் 6 டிகிரி செல்சியஸ் பதிவானது.வழக்கத்துக்கு மாறாக நிலவும் குளிர் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தது.

கோடை காலத்தில் காலையில் வெப்ப நிலை 19 டிகிரி வரையும் மதியம் 35 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகும் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement