முதலீடு எண்ணிக்கை மட்டும் போதாது தரமும் வேண்டும்: சிதம்பரம் கருத்து

திருப்புத்துார்:முதலீடு செய்வது, திட்டங்களை நிறைவேற்றுவது சரி தான். ஆனால் தரத்தையும் பார்க்க வேண்டும். பல இடங்களில் தரமாகவும், சில இடங்களில் தரம் குறைவாகவும் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார்.


திருப்புத்துார் நகர் காங். அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் எம்.பி.. பேசியதாவது: தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்டம் பாராட்டுக்குரியது. நிதி மேலாண்மையை பாராட்டலாம். தமிழ்நாடு அரசின் மொத்த கடன் 9 லட்சத்து 30 ஆயிரம் கோடி. தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதத்தில் அடங்கும். 3 சதவீதத்தில் நிதிப்பற்றாக்குறையை அடக்கியது பாராட்டுக்குரியது.


மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 4.1 சதவீதம் ஆகும். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது வருவாய் பற்றாக்குறை 62 ஆயிரத்து 320 கோடி ஆகும். திமுக ஆட்சியின் இறுதி ஆண்டில் தற்போது 41 ஆயிரத்து 610 கோடியாக குறைந்துள்ளது.
அரசு சார்பில் முதலீடு 57 ஆயிரத்து 231 கோடி ஆகும். முதலீடு செலவுக்கேற்பத்தான் வளர்ச்சி இருக்கும். தமிழ்நாடு பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதற்கு 57,231 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். முதலீடு செய்வது, திட்டங்களை நிறைவேற்றுவது சரிதான். ஆனால் தரத்தையும் பார்க்க வேண்டும். பல இடங்களில் தரமாகவும், சில இடங்களில் தரம் குறைவாகவும் உள்ளது.

பட்ஜெட்டை மதிப்பீடு செய்யவில்லை. அரசு கட்டடங்கள், பாலம்,நெடுஞ்சாலை, மாவட்ட சாலை எல்லாம் தரமாக இருக்க வேண்டும். சில இடங்களில் தரமாக இல்லை.

காவிரி - குண்டாறு இணைப்புக்காக அடிக்கல் அல்ல. ஒரு கல்லை போட்டு போனவர் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி. அன்றே சொன்னேன். காவிரி - வைகை - குண்டாறு இணைப்பிற்கு 2,3 அணைகள் கட்ட வேண்டும். நீண்ட கால்வாய் கட்ட வேண்டும். இவற்றை யெல்லாம் ஆராயாமல் திட்டத்தை அறிவித்தார்கள். இவ்வாறு கூறினார்.

Advertisement